கையால் மலமள்ளும்...
கையால் மலமள்ளும்
தீண்டாத் துயர் நடுவே
முழு மனிதன்
புனிதன்
நீலகண்டனைச்
சும்மா சொல்லக்கூடாது
பெரிய மனிதன் பெரிய மனிதன்தான்
எல்லா மலங்களையும் கூட்டி வழித்து
ஒரே உருண்டையாய்த்
தன் வாய்க்குள் கொண்டுபோய் விட்டான்.
அய்யோ... குடல் புழுத்து அழுகிச்
சாவதற்கா எனப்
பாய்ந்து போய்
அவன் தொண்டையைப் பிடித்து நிறுத்தி
ஆடிப் போய் நிற்கும் பார்வதியை
பேதைமை பேதைமை என உள்சிரித்தபடி
அரவணைத்துக் கொள்கிறான் கண்டன்.
காதல் கொண்டு
அவள் இதழ்களைக் கவ்வும்
அவன் இதழ்களின் நோக்குதான் என்ன?
எத்தகைய திடீர் அதிர்ச்சி அது!
உடலெங்கும் மின்னூட்டம் பாய
தீராப் பசி கொண்டவள் போலவள்
அவன் அதரபானம் பறிகிறதென்ன?
இதுநாள் வரை இல்லாத தித்திப்போ?
காதல் புரளும் மார்பினன்
அவனது பேச்சிலும் மூச்சிலும்தான்
எத்தகைய நறுமணம்!