பேரிளம் பெண்
தன் குழந்தைப் பருவத்தையெல்லாம்
தாய் தந்தை இல்லாதவள்போல் கடந்தாள்.
தன் விளையாட்டுப் பருவத்தையெல்லாம்
நண்பர்களில்லாதவள்போல் கடந்தாள்.
தன் கல்விப் பருவத்தையெல்லாம்
ஆசிரியர்களில்லாதவள் போல் கடந்தாள்.
தன் கன்னிப் பருவத்தையெல்லாம்
ஒரு தோழியில்லாதவள்போல் கடந்தாள்.
தனது நெடிய இளமைப் பருவத்தையும்
மணம் செய்து கொள்ளாதவள்போல்
ஆணின் அண்மை உணராதவள்போல்
தாய்மையடையாதவள்போல்
பெற்று பேணி வளர்த்து பறக்கவிடும்
இல்லற இன்பமே காணாதவள்போல்
கடந்தாள்.
சோர்வின் பெரும்பாரம் அழுந்த
முதுமையின் கரைசேர்ந்து…
இன்று அவளை விம்மச் செய்த
ஆறாத் துயரமதைக் கண்டுநின்றபோது
அவளது தோளில்
மார்கழிக் காலைபோலும்
தொட்டு நிற்பது யார்?
அவனை எப்படி அவள் மறந்திருந்தாள்
இவ்வளவு காலம்?
அவளது சிசுப்பருவத்தின் முதற்சிரிப்பை இயற்றியவன்!
ஒவ்வொரு பருவத்திலும் அவள் தனிமையிலெல்லாம்
உடன்வந்து கொண்டிருந்தவன்!
கண்களில் நதி சுரக்க-நல்லவேளையாக-
இன்று அவள் அவனைக் கண்டுகொண்டாள்!
முதன்முதலாய் முகம்திரும்பி
அவன் புன்னகையைப் பார்த்துவிட்டாள்!
கணப் பொழுதில் அவளை ஒரு புது
மணப்பெண்ணாக்கிவிட்ட காதலன்!
எவர் கண்களுக்கும் புலப்படாத அரூபன்!
அவளது துயர வாழ்வின்
கண்ணீரைத் துடைத்து விட்டோன்!