பக்திப் பழங்கள்
கையில் விசிறியுடன்
இடுப்பாடை மட்டுமே அணிந்த
ஒரு வேனிற்கால மிதவெப்பமண்டலவாசி
பழுத்த பூசணிபோல் துலங்கு
மேனியெங்கும் பூண்ட திருநீற்றுப் பட்டைகளும்
கவலையின் ரேகை படியா
மந்தகாசப் புன்னகையுமாய்
வந்து கொண்டிருக்க,
’பக்திப் பழம்! பக்திப் பழம்!’
என வணங்கி வியந்தபடி
வழிவிட்டது கூட்டம்.
நம்மைப் போலவே இருக்கும்
இவனுக்கு மட்டும் வந்த வாழ்வைப் பாரேன்
என்று சற்று அசூயை கொண்டது,
கூடையிலுள்ள ஒரு குண்டுத் தக்காளி.