சாத்தானியப் பேரரசும் கடவுளும்
இவ் வுலகையே
ஓர் குடையின்கீழ் ஆளும்
அரசனாக்குகிறேன் உன்னை,
உன் பெயரை மட்டும்
என்னிடம் கொடுத்துவிடு என்றான்
சாத்தான்.
நிபந்தனைகளேதும் வேண்டாம்
அந்த அரச பதவியையும்
நீயே வைத்துக்கொள்
என் பெயரையும்
இதோ பெற்றுக் கொள் என்று
கையளித்துச் சென்றுவிட்டார்
கடவுள்.
சாத்தானியப் பேரரசெங்கும்
மாசுபடுத்தப் படாத அரும் பொருளாய்
துயரப் படுவோர் இளைப்பாறும்
மென் தோள்களாய்
இன்தீண்டல்களாய்
சாத்தானைத் தேவனாக்கும்
பெரும் பணியாய்
இடையறாகருணா இயக்கமாய்
பேரறிவாய்
மெய்மையாய்
எங்கும் நிலவியபடி
எங்கும் திரிந்து கொண்டிருந்தது
கடவுள் எனும் பெயரற்ற பேரன்பு.
பெருங்கொடை.
பேரறம்.