Thursday, February 28, 2013

கூண்டுச் சிறுத்தை

எனது சோர்வு
ஒரு குறிஞ்சி நிலத்தில்
பூமிப்பெண்ணிடமிருந்து விலக்கி
வெட் வீழ்த்தப்பட்டுக்கிடக்கும்
காதலனின் இயலாமை
எனது பதற்றம்
அந்தப் பாலியல் குற்றவாளிகளுக்கும்
அவர்களைத் தேடும் காவலுக்குமிடையே
எரியும் பூமி.
என் கவலையெல்லாம்
என காதலியின் உடலும் மனமும் குறித்தே.
ஆனால் எனது செயல்
வெறும் கவிதை எழுதுதல்
என் கண்ணீரை மொழிபெயர்த்தல்.
கவுரவம் கருதியோ
இதற்கொரு பெரிய முக்கியத்துவமிருப்பதாய்ப்
பாவனை செய்கிறேன்? உண்மையான
ஒரு பெரு விளைவைக் கனாக் காணுகிறேன்?
குறைந்தபட்ச என் தொழிலால்
அதிகபட்ச விளைவை எதிர்பார்க்கும்
பேராசையா என்னை ஆட்டிப்படைப்பது?
மறு உபயோகமற்ற
உணர்ச்சிப் பெருக்கால் ஆன
ஜடத்திற்கா
கவிதை கவிஞன் காதல்
என்றெல்லாம் பெயர் சூட்டுகிறேன்?
என்னதிது?
எல்லாவற்றையும்
ஓர் அர்த்தம் நிறைந்த சந்தேகத்தால்
அழித்துக்
கனலும் ஓர் அக்கினிக் குஞ்சு
துருவும் மனம்
இப்போது என் நெஞ்சிரும்புக் கூண்டுக்குள்
இருப்புக் கொள்ளாது உலவும் சிறுத்தை.
சகல நம்பி்க்கைகளினதும் எதிரி
அவநம்பிக்கையும் அல்ல.
என்றால்
கருணையின் மருத்துவ குணமா?

ஆடை கலைந்து சரிந்து கிடக்கும் பூமிப்பெண்ணை நோக்கிக்
குமுறுகிறது கண்காணாக் கானகம்

Wednesday, February 27, 2013

கடவுளோடு நடந்த உரையாடல்

ஒப்புக்கொள்கிறேன் கடவுளே,
உம்மை வணங்குவோர் கோடி.
நீர் ஒப்புக்கொள்வீரா அய்யா,
உமது பக்தர்களின் கையில்
’நாய் பெற்ற தெங்கம்பழம்’ தானே நீர்?

இன்று என் கவிதைகள்
உம்மைப் போட்டு உடைக்கின்றன
நீர்தான் ஒரு வலியில்லா மரணமில்லா
அதிர்ஷ்டப் பிறவியாயிற்றே!
சும்மா திறந்து சிரியுமய்யா சிரியும்.
உம்மை எரித்துக் குவிக்கின்றன என் கவிதைகள்
அப்போதும் உமது சாம்பலை எடுத்துப் பூசிக்கொள்ளும்
பக்தனில்லை நான். எனினும்
அதிர வைக்கிறதையா உமது சாம்பல்.
திரும்பத் திரும்ப
நடமாடும் கழிபோல
’நான்’ ’நான்’ என வந்து
’அவதரி’க்காதீரும் இனி.
கவிதையின் அடித்தல் கோடானது
சிலுவையின் குறுங்கட்டையாகி உம்மை அறையும்

இரும்:
வேணடாங்கல்ல.
எதற்கும்
எவருக்கும்
எக்கணமும் இடைஞ்சலில்லாது
’சிவனே என்று’
இருக்கும் வகை தெரிந்து
இருந்தால் உம்மை யார் தடுக்கா?

எடுப்பார் கைப்பிள்ளையாய்
எத்தர்களோட ஆயுதமாய்
மடையர்களின் சாம்பிராணியாய்
ஒரு பிண்டமாக நீர்
எப்படி இருக்கப் போச்சி?
அப்பேர்ப்பட்டவனுகளோட
கைகளையெல்லாம் சுட்டெரிக்கிற
நெருப்பாக இருக்கத் தெரிய வேணாம்?

இருந்தால் நெருப்பு
அணைந்தால் சாம்பல்
அதுவல்லவா வாழ்க்கை

Tuesday, February 26, 2013

பளு

நீண்ட நேர மேஜை வாசத்தை விட்டு
வெளியே வந்தேன்

பூமி பறந்துவிடாதிருக்க வைத்த பாரங்கள் போல
மரமும் தோப்பும் மலைகளும் புற்களும்.
மனிதர்களின் குடியிருப்பு இல்லங்களும் அவ்வாறே

காற்றில் துடிக்கும் மேஜைவெயிட் அடிக்
காகிதம் போல் ஒரு வேதனை

அன்று உணர்ந்தேன்:
மனிதனை அழுத்திக்கொண்டிருக்கும் பளு
என்னவென்று

ஏமாற்றம்

நான் பிறந்து வளர்ந்தேன்
ஒரு சிறு நகரத்தில்
அங்குள்ள மக்கள் அத்தனை பேரும்
கிராமத்து மனிதர்கள், குடியேறிகள்.
அவ்வப்போது கிராமங்களைப்
போய்ப் பார்ப்பவர்கள்
போதிய கவனிப்பில்லா முதியோர் தனிமை
அந்தக் கிராமங்களின் விழிகளில்

இயந்திரங்களுடனும் வேக ஊர்திகளுடனும்
தன் போக்கில் வளர்ந்துகொண்டிருந்தது நகரம்
அச்சத்தாலும் மரணத்தாலும்
ஆர்வத்தாலும் பிணிக்கப்பட்டவனாய்
நானும் வளர்ந்தேன்

ஒரு நாள் பெருநகர் ஒன்றுக்கு
நான் செல்ல நேர்ந்தது
அங்கே மனிதர்கள்
நான் அறிந்த அதே பாஷையைத்தான் பேசினார்கள்
எல்லோர் பிறந்த நாட்களும் ஒன்றாக இருக்கவில்லை
கடைவீதிகள் விளம்பரங்கள் கட்டடங்கள் ஒவ்வொன்றும்
அளவில் பெரியனவாய் இருந்தது தவிர வேறொன்றுமில்லை

Monday, February 25, 2013

எது?

பள்ளிக் குழந்தைகளின்
நீண்ட அணிவகுப்பிலிருந்து
ராணுவத்தின்
நீண்ட அணிவகுப்பிற்கு
யாரோ நம்மை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்
வரிசை வரிசையாய் நீளும் கூண்டுக்குள்
முட்டையிட்டுக் கொண்டிருக்கும்
ஒரே வகைப் பறவைகளாய்
நாம் மாறிய தெவ்விதம்?
சாட்டைகளேந்தி
நம்மை மாற்றிக் கொண்டிருப்பதுதான்
எவ்வகைச் சக்தி?
கூண்டுக்கு வெளியேயிருக்கும் சுதந்திரவெளி
நம்மை ஈர்க்காமல் போனதெவ்விதம்?
இருள், பொந்து மறைவிடங்கள் தேடிப்
பதறியோடும் சிறுவிலங்குகளாய்
நாம் எவ்வாறு மாறினோம்?
நம்மை உருமாற்றிய மெதுவிஷத்திடமிருந்து
நம்மை விடுவிக்கும் திடீர் அமிர்தம் எது?

இயலாமை

எத்தகைய காகிதச் சுக்கல்கள்
பரபரக்கும் அறை இந்த உலகம்?

நெஞ்சை வலிக்க வைக்கும் எண்ணங்களை,
மயங்கி மயங்கி விழவைக்கும் நினைவுகளை,

குழந்தைகளென வந்தவர்கள் முன் உஷாராகி
அவசர அவசரமாய்க் கிழித்தெறிந்தேன்

ஒரு துண்டோடு ஒரு துண்டு ஒன்றியும்
பற்பலவாறாகவும் குழந்தைக்கு இவ்வுலகம்
அனுபவமாவதைத் தடுக்க முடியவில்லை யாராலும்

Sunday, February 24, 2013

இனி என்ன கவலை எனக்கு?

நான் இன்ன மதத்தின் தீவிரப் பற்றாளி
ஆகவே வாங்கிவிட்டேன் சொர்க்கத்திற்கு டிக்கெட்டு
இனி என்ன கவலை எனக்கு?

நான் இன்ன குழுவின் தீவிர உறுப்பினன்
ஆகவே ரொம்ப விபரமானவன், மனிதாபிமானி, முற்போக்கு
இனி என்ன கவலை எனக்கு?

எமக்குத் தொழில் எதிர்த்து நிற்றல்
ஓர் ஆலை முதலாளி
என்னை எடுத்துக்கொண்டார் என் வீரத்திற்காக.
கும்பிடு.
பயமுறுத்தல் மிரட்டல் மற்றும்
கொலைகளும் செய்வேன் இனி
இனி என்ன கவலை எனக்கு?

கவிதையியல்

ஆண்கள் யாரும் இல்லை என
தொடைப் பக்கம் சொரிந்துகொண்டு
(ஆண்) ஆதிக்க அழகியலைச்
சிதைக்கிறாள் ஒருத்தி

’தூமையக் குடிச்சான்’ என
நேர்கொண்டு விளாசுகிறாள்
இங்கேயொருத்தி

Saturday, February 23, 2013

ஒரு கட்டடத்தைப் பாதுகாப்பது எப்படி?

கட்டிமுடித்த மனிதன்
இல்லை அந்தக் கட்டடத்துள்
கதவுகளும் ஜன்னல்களும்
தங்கள் அர்த்தங்களை இழந்து மூடிக்கிடந்தன
ஓர் உடைப்புவழி உட்சென்ற
திருடர்களும் வேசிகளும்
கள்ளப் புணர்ச்சிக்காரர்களும்
இருந்து புழங்கக் கூசும்
அசுத்தப் பெரும்பாழாய் நாறியது அந்தக் கட்டடம்

செத்த எலிகளைத் தொடர்ந்து
புழு பூச்சி ஜீவராசிகளும்
பெருச்சாளிகளும் பொந்துகளும் பாம்புகளும்
இருள் தேடி வௌவால்களுமாய்
செழிப்புடன்
ஜே ஜே என நிறைந்துதானிருந்தது அந்தக் கட்டடம்

ஒரு கட்டடத்தைப் பாதுகாப்பது எப்படி என்பதை
ஒரு சாதாரண மனிதன் அறிவான்
நாம் அறியவில்லை;
துயரகரமானது நமது சித்திரம்

பற்றி எரியும் உலகம்

பற்றி எரியும் உலகம்
அதைப் பதறாமல் தொட்டு ஒரு பீடி பற்றவைத்துப்
புகைவிடும் ஒருவன்

புகைத்தவன் சுண்டி எறிந்த
பீடி பற்றி
பற்றி எரியும் உலகம்

புகை நேசர் இருவர்
ஒருவரை ஒருவர்
நெருங்கிக் கொண்டிருந்தார்
நெருப்புக்காக
ஆகா, என்ன தோழமை என்ன தோழமை
நம் தோழமை

தீயினாற் சுட்ட வடு
திரும்பத் திரும்பப் புண்ணாகிறதே
என் செய்வது?

நெருப்பு ஒழுக
தொண்டை கிழித்துக்கொண்டிருக்கிறான் ஒருவன்
ஒரு குவளைத் தண்ணீராய்
உருமாறிக்கொண்டிருக்கிறது
அளவிடமுடியாப்
பெருநெருப்பொன்று

Friday, February 22, 2013

சோலை

பாலைவனத்தில் பயணம் செய்வோனுக்கு
கைவசமுள்ள நீர்க்கலமே
சோலை

நொண்டிக் குதிரை *(ஆப்பிரிக்கப் பழங்கதை ஒன்றைத் தழுவியது)

தன்னந் தனியாய்ப் பாய்ந்துசெல்லும்
ஒரு குதிரையை
அது பார்த்ததில்லை

நொண்டிக் குதிரை அது
தான் நொண்டி என்பதையே உண்டு வளர்ந்தது
வலிமைமிக்க ஒரு கொழுகொம்பை நாடியே
எப்போதும் அலைந்தது நொண்டி நொண்டி

சிங்கத்தைக் கண்டு நட்புக்கொண்டது
ஒரு நாள் யானை ஒன்று
சிங்கத்தைத் தலைக்குப்புறத் தூக்கி எறிந்தது
அன்று முதல் நம் நொண்டிக் குதிரை
யானையிடம் சென்று நட்புக் கொண்டது

ஒருநாள் வேட்டைக்காரனொருவன்
துப்பாக்கியில் பதறியது யானை
ஓடிப்போய்ச் சேர்ந்துகொண்டது
அவனோடு நம் நொண்டிக் குதிரை

அன்றுமுதல் காணப்பட்டது
கண்பட்டை கடிவாளங்களுடன்
அவனுடைய லாயத்தில்

நீர்ப்பயம் (ஹைட்ரோஃபோபியா)

நாய் கடிக்காது பார்த்துக்கொள்
அதிலும் வெறிநாய் கடித்தால்
பேராபத்து
அந்த வெறிநாய் போலே
ஊளையிட்டுத் திரிவாய்
தண்ணீர் அருந்த இயலாது
தொண்டை நரம்புகள் தெறிக்கும்
அப்புறம் தண்ணீரைக் கண்டாலே
அலறித் துடிப்பாய்
மரணத்தில்தான் உனக்கு விடுதலை
ஆகவே
நாய்க்கு வரும் நோய்பற்றிக்
கவலை கொள்
நாய்பற்றிக் கவலைகொள்

Thursday, February 21, 2013

அறுவடை

நீரில் தெரியும் நெற்கதிர்கள்
சொர்க்கத்தின் விளைச்சல்கள்
நாம் அதனை
நேரடியாய் அறுக்க முடியாது

ஏதோ சலனம்

ஏதோ சலனம். திடுக்கிட்டு விழித்தேன்.
கும்மிருட்டு. என் பால்கனியின் கீழ் உலகம்
மின் இணைப்பு மற்றும் மனிதர்க்கிடையான
தொடர்பு துண்டிக்கப்பட்டு
யாரோ சிற்றுயிர்களாய்
ஏதோ செய்யும் அரவம்

கரும்புச்சாறு விற்பவன்

புல்லைப் புதக் கரும்பாக்கிய தீரத்துடன்
தன் வாழ்வும் தாழ்வும்
விழைவோர் முன் தான் எனும் தாழ்மையுடன்
தன் தொழிலாலே தான் பெற்ற உரத்துடன்
போதகர்களும் தீர்க்கதரிசிகளும் நின்ற
அதே நடைபாதையில்தான் அவனும் நிற்கிறான்

காய்ந்த கருப்பஞ் சக்கைகளாய்ப் படர்ந்த ஒளியில்
சிற்றெறும்புகளாய் உலவுகின்றனர் மக்கள்

Wednesday, February 20, 2013

அவ்வப்போது

திருடர்கள் காவலர்கள் உடையில்
இணக்கவாதிகள் கலகக்காரர்களாய் அபிநயித்து
நலவாழ்வு மற்றும் லகுபுகழின் மடியில்
இருள்சிறை வதைகளின்
கலகக்காரர்களைக் காட்டிக் காட்டியே
புதியவர்களைப் பழக்குகின்றன
பெரியவர்களின் கைவிரல்கள்.
நாம் பார்க்காததா?
எத்துணை பெரிய கடவுளானாலும்
அவரை மண்ணைக் கவ்வ வைக்க
நமக்கா தெரியாது?
கணினிகள் கொட்டிக் கொட்டிக்
கணினிகளாகின்றன பிஞ்சு மூளைகள்.
கலைமகள் திருமகள் அருளாசிகளால்
பெரியதொரு விபச்சார விடுதியாகிவிட்ட
உலகுக்குள்
அவனும் வந்துபோகிறான்
அவ்வப்போது

அணில்

அமைதியான இக்காலைப் போதில், என்ன இது
என் பொறுமையைச் சோதிக்கும் நச்சரிப்பு?

தலைபோகிற அவசரத்தில்
இயங்கும் தந்திக் கருவியைப்போல்
யாருக்கு
என்ன செய்திகள் சொல்லப் பிரயத்தனப்படுகிறாய்?

உன்னிடம் இல்லாத எதுகொண்டு
இக்காலைப் பொழுதோடு முரண்படுகிறாய்?

தவறு உன்னுடையதோ என்னுடையதோ?
பாடலையும் அமைதியையும் விழையும் இதயம்
நம்முடையதோ?

Tuesday, February 19, 2013

பிறப்பு ஓர் அலறல்

பிறப்பு ஓர் அலறல்
வாழ்வு அதன் மவுனம் மற்றும்
பிறப்பும் மரணமும் புரியும்
முடிவிலா மற்போர்

என்னை நான் நேசிப்பதிலேயே...

மனிதகுல மேன்மை குறித்த ஆயாசம்
என்னை நான் நேசிப்பதிலேயே கொண்டுவிடுகிறது
காற்றுவெளியில் ஓர் அகல்விளக்கைக்
கை பொத்திப் பாதுகாப்பதுபோல
என்னை நான் நேசிப்பதிலேயேதான் இது ஆரம்பித்தது
என்ற உணர்கையும்
சொற்களின் பயனின்மையை உணர்ந்துகொண்டே
சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர
வேறு வழியற்ற தனிமையும் நான் ஆனேன்

கண்ணாடிக் கூண்டுக்குள் அடைபட்டவன்
வெளிப்படுத்த முடியாத செய்தியால்
மேலும் மேலும் பின்னலாகி
தவித்து அலறும்
தீவிரமான சமிக்ஞைகளாக மட்டுமே எஞ்சுகின்றன
துடிப்புமிக்க எனது சொற்களும் படிமங்களும்

ஆசீர்வதிக்கப்பட்டனாய் மகிழ முடியாமல்
சபிக்கப்பட்டவனாய்த் துயருறவும் முடியாமல்
என்னை நான் நேசிப்பதிலேயே மறைந்திருக்கிறது
என்னை நொறுக்க எழும் அவலம்
என்னை நொறுக்க இயலாதிருக்கும் மர்மம்

பலி

முத்தவெறி கொண்ட இதழ்கள் அறுந்து
பேச முடியாமற் போன நா
ஆர்வப் பித்தால் ஆரத் தழுவிக்
காயம்பட்டுக் கசியும் இதயம்
தனக்குத் தானே மாலையிட்டுக் கொண்டு
தழுவத் துடிக்கும் இரத்தத்தால்
பாய்ந்து பலியாகும் உடல்
தன் குருதி குளித்துக் கூர்மின்னும் வாளாய்த்
தன்னைப் பார்க்கக் கிடைத்த பார்வை

யார் உண்டாக்கிக் கொண்டிருப்பது
நூறு நூறு மின்னல்களால் அறியப்படும்
இவ்வாளின் சுழற்சியை?
எவருடைய சிந்தனைகள் இவை?

அன்றைய காலைச் சூரியனின் முகத்தில்
ஓர் ஏளனப் புன்னகை

Monday, February 18, 2013

ஒரு விளையாட்டு

எங்கள் வீட்டின் நான்கு சுவர்களுக்குள்
அடிக்கடி நிகழும் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு
நாங்கள் – நானும் என் மகளும் மகனும் –
ஒன்று சேர்ந்துகொண்டு
என் மனைவியை விதவிதமாய்க் கோட்டா பண்ணுவது
(அவ்வப்போது நான் அவளது இடத்திற்குத் தள்ளப்படுவதுமுண்டு)

நீங்கள் எப்போதும் என்னைத் தனிமைப் படுத்துகிறீர்கள்
என்னும் அவளது புகார் உண்மையான வருத்தமா
என்பது அறிய முடியாத புதிர்

’இந்தப் பிரிவில்தான் நாடகம் இருக்கிறது’ என
அவளது ’உம்மணாம் மூஞ்சி’யை
தத்துவ வாடை வீசும் என் காதல்மொழியுடன் நெருங்குகையில்
’போதும் போதும்’ என நிறுத்துகிறது
அவளிடமிருந்து விளையாட்டாய்ப் பொங்கியெழும் வேகம்

குழந்தைகளும் விளையாட்டும்

கோடை விடுமுறைக் குழந்தைக் குதூகலங்களைக்
குல்மொகர் பூக்கள் எதிரொலிக்கின்றன

கடிவாளங்களை விட்டபிறகுதான் தெரிகிறது
(அவ்வளவு மக்காகி இருக்கிறேன்)
குழந்தைகளின் இரத்தம் எப்போதும்
விளையாடிக் கொண்டிருக்கவே துடிக்கிறது

குழந்தைகள் ஒருநாளும் தத்துவம் பேசுவதில்லை
ஏனெனில்
அவர்கள் வாழ்வை இழக்கவில்லை

Sunday, February 17, 2013

அவள் திரையினை விலக்கி நோக்கிய அழகில்

அவள் திரையினை விலக்கி நோக்கிய அழகில்
அது இருந்தது
எல்லாத் தொழில்களும் திரைகளை நெய்கின்றன
கவிதை ஒளியை நெய்கிறது.
திரைகளைக் கிழிக்கிறது என்பது
ஓர் எதிர்மறைச் சொற்றொடர்

மீண்ட நட்பு

பெரும்பேறொன்றின் அருட்கொடையோ
இந்த மாலை அமைதி இருக்கை?
எந்த பீடத்தையும் அவாவிச் சலிக்காத
பெரும்பீடம்

இது யார் வீட்டு முற்றத்தில்
யார் தந்த இருக்கை?
என்னுடன் உரையாட
எதிரே ஒரு பெருவெளி.
அவனும் நானுமன்றி யாருமில்லை இப்போது
அனந்த கோடி ஆண்டுகளாய்த் தொடர்ந்துவரும் நட்பில்
பேசி முடித்த உரையாடலின் மவுனமுடிவோ
இடைவெளியோ இந்த அமைதி?

என்னைப் புகழ்ந்தவைதான் அச்சொற்கள் எனினும்
என் காகிதக் குப்பைகளுக்குள் ஒருநாள்
நான் அலட்சியமாய் விட்டெறிந்த
அந்த எழுத்துக்களைத் தீட்டிய முகம்
அறியப்படாத உன் முகம்தான் என்பதை
ஒரு மரணப்படுக்கையின் போது அறிந்து துடித்தேன்...
அது ஒரு பழைய கதை

Saturday, February 16, 2013

இரண்டு மாபெரும் உண்மைகள்

நான்தான் அந்தக் கடவுள்
என உணர்ந்த ஒரு தருணமும்

நான் முழுமையாய் அழிந்தபோதே
இவ்வுலகு ஒரு பேரமைதியில் ஜொலித்ததும்

ஸ்கேட்டிங்

போகிறேன் போகிறேன் போகிறேன்
மேலே மேலே மேலே
ஒரு பாதம் சத்தியத்தில்
ஒரு பாதம் மாயையில்
விசித்திர வாகனமொன்றில் ஏறி நான்
போகிறேன் போகிறேன் போகிறேன்
முடிவில்லா முடிவில்லா முடிவில்லாப் பாதை
அடைகிறேன் அடைகிறேன் அடைகிறேன் பரவசம்

கவிஞன்

1.
கண்ணாமூச்சி விளையாட்டில்
கண்டுபிடிப்பாளனான ஒரு குழந்தை;
தேடும் வேளையெல்லாம் துக்கம்
காணும் வேளையெல்லாம் ஜீவன்
கண்டுபிடிக்கும் வேளையெல்லாம் ஆனந்தம்

2.
அதிகாரமே கடவுள் எனில்
அதிகாரிகள் மாமன்னர்கள்
அதிகாரமற்றோர் வறியவர்கள்
கல்வியாளர்கள் காவல் அதிகாரிகள்
எழுத்தாளர்கள் கைதிகள்
கவிஞன்
அனைவர்க்கும் விடுதலை ஈட்டித்தரும்
புரட்சியாளன்

Friday, February 15, 2013

வழங்கல்

எங்கும் நிறைந்துள்ள ஒளியை
அள்ளி வழங்க நீண்ட கைகள்
கவனிப்பாரற்ற தனிமையில் மூழ்கியும்
தன் புறங்கைகள் வழியாய் வழங்கிக்கொண்டிருக்கிறது
எல்லோரும் விரும்பும் நிழலை

அசத்து

அதற்கு மழையும் தெரிவதில்லை
வெயிலும் தெரிவதில்லை
அதைச் சோதிப்பதுபோல் நான் விட்ட
கூரம்புகள் தைத்ததும் தெரியவில்லை
அது சலனிப்பதே இல்லை என்பதை
அப்போதுதான் நான் உணர்ந்தேன்
சலனிக்காதவை எல்லாம்
எதிர்த்திசையில் சலனிப்பது தெரிய
நான்தான் வேகமாய்ச் சலனித்துக்கொண்டிருக்கிறேன் என்பதையும்

சுசீலா

குடும்ப சகிதம் கூடும்
கல்யாணம் காட்சிகளின்
கும்பல் புகைப்படங்களில்
எப்போதும் சுசீலா -
எல்லோரும் அழகுப் பகுமைகளாய்ப்
புன்முறுவல் காட்டி நிற்க
சுசீலாவின் ஆட்காட்டி விரல் மட்டும்
காண்போரின் கண்களைக் குத்த நீண்டிருக்கும்
திறந்த வாயுடன்
அவள் குரலும் பதிவாகியிருக்கும் -
”எனது அழகு செயல்துடிப்பில்”

Thursday, February 14, 2013

மனித உடல்கள்

தன்னந் தனியாய் நான் கடலோரம் நடந்தபோது
குறுமணல் ஈரம் மனிதச் சதையின் தீண்டல்
பிஞ்சுமேனி
தன் அன்னையைத் தொட்டுணர்ந்த ஞாபகம்
அன்றியும்
ஆனந்தம் தரும் அது என்ன நெகிழ்வு கூச்சம்
இரத்தத்தில் அதிர்ந்தது?

இன்று பல்லக்கின் கீழ்
நான்கு மனிதத் தசைகளின் அசைவையும்
சீரான ரப்பர் டயர் வேக ஊர்தலின் கீழ்
சில மனித உடல்களையும் உணர்வதுபோல்
அந்த இரத்தம் அதிர்கிறது
மதுக்கடை வருமானம் கொண்டு
சம்பளம் வழங்கும் அரசின் ஊழியன் இரத்தம்
சமாதானமடைய
அதற்கும் வேண்டுமோ ஏதாவதொரு போதை?

யானை

அப்பேர்ப்பட்ட கானகத்தைக் காட்டு விலங்கை
நான் கண்டதில்லை எனினும்
கண்டிருக்கிறேன் வேறு எங்கோ எவ்விதமோ

முறியும் பெருங்கிளைகள்
சாயும் குறுமரங்கள்
சிக்கித் தவிக்கும் உயிரினங்கள்
சரிந்த புதர்கள்
நடுவே
திடமாக
எதையோ
பூமியில் ஊன்றி விதைத்துப் போகும்
ஒரு விரல் போல்
யானை ஒன்று நடந்து செல்வதை

சொற்களின் நர்த்தனம்

யாருமிலா ஒன்றின் மொழிபெயர்ப்பாளன் நான் எனில்
என் வலிகளின் ஆனந்தங்களின் பொருள் என்ன?
என் இதயத்தின் மேல் அந்த யாருமிலா ஒன்றின் சொற்கள்
ஆடும் நர்த்தனமோ?
இப்படித்தானோ
என் வலிகளையும் ஆனந்தங்களையும்
கூறும் என் சொற்களும்
அந்த யாருமிலா ஒன்றின் உரையை
நான் மொழிபெயர்த்ததாய் எண்ணும் என் சொற்களும்
ஒன்றேயாகின?

Wednesday, February 13, 2013

கோயில்கள்

ஓடும் நதியைத்
தெப்பக் குளத்தில் தேக்கியது கோயில்
நாறியது நாளடைவில்

புல்வெளியில் ஒரு கல்

புல்வெளி மீது சிறு குருவி வந்திறங்கித்
தத்திய காட்சி, அழிந்து
புல்வெளி மீது ஒரு கல் இப்போது.
மனிதச் சிறுவன் ஒருவனால்
அந்தப் பறவை நோக்கி எறியப்பட்ட
கல்லாயிருக்கலாம் அது

இப்போது புல்வெளி இதயம்
வெகுவாய்த் துடிக்கிறது
கூடுதல் மென்மையால்
கூடுதல் அழகால்

ஒரு தூயவெளி

ஊருக்கு வெளியே ஒரு தூயவெளி
ஆங்காங்கே முளைத்திருக்கும் காலனிகள்
மாலைக் கதிரொளிப் போர்வை விரித்திருக்கும்
ஆளரவமற்ற சாலை நீட்டம்
தன்னந்தனியாய்ப் புறப்பட்டதொரு மாலை நடை

திடீரெனச் சூழ்ந்த ஓர் அழகில்
திகைத்து நான் நின்ற போதில்
புன்னகைத்து வரவேற்று அழைத்தது ஒரு தீண்டல்
எங்கே யார் ஏன் எதற்கு எனக்
குதிக்கும் மூளையும் மவுனமாயிருந்தது அப்போது

Tuesday, February 12, 2013

மரணப்படுக்கை

1.
அகண்டவெளி அந்தரத்திலிருந்து
எல்லாவற்றின் மீதும் நிபந்தனையற்றுக் கவியும்
அது வருகிறது வருகிறது.
தரைமீது
உச்சபட்ச கொடூரத்தின்
சிகரமுக நெருப்பு
திடுக்கீட்டின் உச்ச வேதனை
எக்கணமும் விலக்கமுடியா இயல்புக் கருணை
அக் கொடூர முக நெருப்பையும்
கொஞ்சித் தழுவியபடி
விரைவில் முடித்துக்கொள்கிறது
தன் உடம்பை

2.
எத்துணை அற்புதம் இந்த மூச்சு
சுருதி சேர்க்கப்பட்ட நரம்புக் கருவிபோல்
எவ்வளவு துல்லியம் இந்த உடம்பு
எத்துணை நுட்பம்
எத்துணை அபூர்வ படைப்பு

படுக்கையில் பூத்த இந்த மலர்ச்
சிசுவைத் தடவித் தடவிச் சீராட்டுகிறது
மரணம் – அதன் தாய்

3.
நோயால் நொந்து ஜீணித்து
நுண்ணிவிட்ட உடம்பின் மேல்
உடலும் மனமும் ஒன்றான சுருதி ஏறி
குருவி ஏற சிறு கொம்பாடும் சலனம்போல்
நடுங்குகிறது
மரணம் தொட இருக்கும்
உடம்பு

4.
அனந்த கோடி ஆண்டுகளாய்
மரணப்படுக்கையில் ஓர் உடம்பு
அதன் ஒரே செயல்பாடாய்
அன்பு – அவ்வுடம்பின் தொண்டைக் குழாயில்
மேலும் கீழுமாய் இயங்கும் மூச்சு
இடையறாது வெளி உந்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது
இப் பிரபஞ்சம் முழுவதையும் நிரப்ப உத்தேசித்தது போல்

5.
மிகப் பரிச்சயமான இந்த அனுபவத்தை
இத்துணை காலம் எப்படி மறந்திருந்தேன்?
அதிதீவிர சிகிச்சை அறை நோக்கி
இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறேன்
முடிவற்று நீண்ட ஒரு மருத்துவமனைத் தாழ்வாரத்தில்
பிணமும் பிறவியுமாய் நான்

6.
அமுதம் கடைகிறது
கூரை மின் விசிறி
அறை வெடித்துவிடாதபடி
கண்காணிக்கிறது
ஜன்னல் வெளியே
பரந்திருக்கும்
கருணைவெளி

7.
ஆகா எவ்வளவு ஆனந்தம்
இந்த மரணப் படுக்கை!
ஆனாலும் எப்படி வந்தன
இந்தச் சித்ரவதைகளும் ஊடே?

8.
எல்லா உறுப்புகளையும்
பத்திரமாய் திருப்பிக்கொடுத்துவிட்டாய்
நன்றி.
சூழல் மாசு செயும் மரித்த மிருகம் போல்
இதுவரை இவ்வுடம்பு தன் அணுத்துடிப்பினாலேயே
உலகைத் துன்புறுத்தி வந்துள்ளதாய் ஓர் உணர்வு.
இனி உன்னைப் பேணுவதன் மூலம்
உலகை – மன்னிக்கவும் – சுற்றியுள்ளவர்களை
உன்னிப்பேன்

9.
வெகுகாலம் கழித்து
தட்டுத் தடுமாறி
கட்டிலை விட்டெழுந்து
என் நாற்காலியை ஜன்னலருகே
இழுத்துப்போட்டு அமர்ந்து விட்டேன்

துல்லியமாக எந்தக் காட்சியும் துலங்கவில்லை

எங்கும் இதயத்தைப் பிழியும் ஒரு நிம்மதியின்மை
அமைதியற்ற மனதின் இடையறாத சலசலப்பாய்
பிரபஞ்சக் காட்சிகளெங்கும் ஓர் அசைவு
கொடூரமான காலத்தில்
எனக்குப் பணிவிடை செய்ய வந்தவள்
முடிவற்ற அலுப்பின்
ஒரு சவுகரியமான முடங்கலில்
காலங்காலமாய் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறாள்
அடிக்கடி எழும் குத்தல் போன்ற விழிப்பில்
ஆழ்ந்த தூக்கம் இல்லை அண்ணா என்கிறாள்
இன்று மீண்டும் படுத்துத் தூங்குகிறாள்.
முடிவற்ற அழகு அவள் உடம்பிலிருந்து
அந்த அறையை நிரப்பிக்கொண்டிருக்கிறது
அறையெங்கும் ஓர் அபூர்வமான நிச்சலனம் சாந்தி
அறை கொள்ளாது வீங்குகிறது
மெல்லத் தட்டுத் தடுமாறி எழுந்து
அறைக் கதவைச் சற்றே திறந்துவைக்கிறேன்
மருத்துவமனை வெளியெங்கும்
சிறகடித்து அலைந்த இரு குழந்தைகள்
அறைக்கு முன் வந்து ஆனந்தமாய்க் கலகலத்து நிற்கின்றன
வெகு காலமாய் என் கட்டிலில்
தலைப்பக்கமும் கால்ப்பக்கமுமாய் நின்று
என் உயிரை அலைக்கழித்து விளையாடிய
ஜனன மரணக் குழந்தைகள் அவை

Monday, February 11, 2013

என் உணர்ச்சிகளுக்கு இயைப

என் உணர்ச்சிகளுக்கு இயைப ஒலிக்கும்
என் பேச்சிலும் சொற்களிலும்
கர்வம் கொண்டிருந்தேன் நான்
காடுகளிலும் மலைகளிலும்
சளைக்காமல் ஏறி இறங்கும்
கால்களின் வலிமையில்
மிக்க சந்தோஷம் அடைந்திருந்தேன்
என் முரட்டுக் கைகளின் வழி
ஆயிரக்கணக்கான ஆண்டுகளின்
மனித உழைப்பை எண்ணிப்
பெருமிதம் அடைந்திருந்தேன்
அவ்வளவும் எரிந்து சாம்பலாகின
எவருமறியாமல் இரகசியமாய்
என்னைத் தாக்கிய ஒரு ’நோயா’ல்

எனது கைகளில் கால்களில்
என் சொற்களில்
சுகமாய்ப் படுத்துறங்குவதை விட்ட கவிதை
துள்ளி எழுந்தது புதியதொரு கண்டுபிடிப்பைக்
கண்டதுபோல்

சொர்க்கம்

அங்கே
ஒவ்வொருவர் பேச்சும்
ஒரு இசை தவிர வேறில்லை
ஒவ்வொருவர் செயலும்
ஒரு நடனம் தவிர வேறில்லை
ஒவ்வொருவர் நோயும்
மற்றவர் தொட்டவுடனே
குணமாயிற்று
காண்பாரென்றெவருமில்லா
பாடலும் ஆடலும் தீண்டலுமான
ஒரு மாபெரும் கலை நிகழ்ச்சியாய்த்
தன்னைத்தானே கொண்டாடிக் கொண்டிருந்தது
உலகம்

Sunday, February 10, 2013

அந்த ஒரு வரி

அந்த ஒரு வரியை எழுதி முடிக்கையில்
விடிந்துவிட்டது
விடியலில் அந்த ஒரு வரியும்
மறைந்துவிட்டது

மாலைநடை கிளம்புகையில்

மாலை நடை கிளம்புகையில்
தேடி வரும் நண்பர்களுக்காக வேண்டி
எந்தச் சாலையில் எதுவரை
போகறீர்கள் அப்பா எனக்
கேட்கிறாள் என் மகள்
சாலைகள் ஏதும் இல்லை என்பதையும்
தன்மைவரை நடப்பேன் என்பதையும்
எப்படி எடுத்துரைப்பேன்

பள்ளி இடைவேளையில்

பாவாடை மறைப்புள் உட்கார்ந்திருக்கும்
பெண்குழந்தை
தன் உடலிலிருந்து
திரவக் கத்திபோல்
பூமிக்குள் பாயும் நீரின்
மர்ம இசையை
உற்றுக் கேட்கிறாள்

மறைவற்று
ஒன்றுக்கை
இயக்கும் குறும்புச் சிறுவன்
நீரூற்றாய்ப் பொங்கி
மேல் நோக்கித் தெளிபடும்
நீரின் அழகை
உற்று ரசிக்கிறான்

பிடிபடாத ஒன்றின் இரகசிய இயக்கத்தைப்
பார்த்தபடி இருக்கிறேன் நான்

Saturday, February 9, 2013

ஒரு பயணம்

கூட்டத்தில் ஓர் இடம் பிடிப்பதற்காகக்
காலங்கள் எவ்வளவை வீணாக்கினாய்
எஞ்சிய பொழுதுகள் எரிந்துநின்ற வெளியில்
என்ன நடந்துவிடுமென்று அஞ்சினாய்

பெற்றோர் உடன்பிறந்தோர் தவிர்த்த
உற்றார் உறவினர்களை
உறவு சொல்லி விளிக்க
உன் நா காட்டும் தயக்கத்தில்
என்ன எச்சரிக்கையைச் சுமந்து வந்தாய்
உன் அறியாப் பருவத்திலிருந்தே

கூட்டத்தில் ஓர் இடம் பிடிப்பதற்காகக்
காலங்கள் எவ்வளவை வீணாக்கினாய்
எஞ்சிய பொழுதுகள் எரிந்துநின்ற வெளியில்
என்ன நடந்துவிடுமென்று அஞ்சினாய்

பெற்றோர் உடன்பிறந்தோர் தவிர்த்த
உற்றார் உறவினர்களை
உறவு சொல்லி விளிக்க
உன் நா காட்டும் தயக்கத்தில்
என்ன எச்சரிக்கையைச் சுமந்து வந்தாய்
உன் அறியாப் பருவத்திலிருந்தே

எப்போதும் உன் முகத்தில்
வெகு நீண்ட பயணத்தின் களைப்பு
இன்னும் வரவில்லையோ
நாம் வந்தடைய வேண்டிய இடம்?
இன்னும் காணவில்லையோ
நாம் கண்ணுற வேண்டிய முகங்கள்?

மருத்துவமனையின் நீண்ட தாழ்வாரத்தில்

உன்தூய உடையில்
வாளின் பளபளப்பு
உன் நடையில்
அழகின் ரகசியம்
உன் கைகளில்
பரிசோதனைக்கான என் இரத்தம்
பரிசோதனைக் கூடம் நோக்கி
அந்த இரத்தமே உன்னை அழைத்துச் செல்கிறது
என் இரத்தத்தில் நீ காணும் நோய்களோடு
இக்கவிதையின் கனல் துடிப்பையும் நீ காண்பாய்
அப்போது நாம் அனைவருமே காப்பாற்றப்பட்டு விடுவோம்

காதல் மொழிகள்

நீயே என் இன்னுயிர் என் இதயம்
(ஆனால் என்னுள் கனல்வது
என் இதயத்தினின்றும் வெளியேறத் துடிக்கும் ஒரு வேகமே)
நாம் இப்படியே என்றும் இருப்போமா?
(நிரந்தரமற்றவை மத்தியில் நிரந்தரமானது
இந்தக் கணம் மட்டும்தான்)
நான் நோயில் விழுந்தால்
நான் என் படுக்கையாவேன்
என் கால்கள் முடமானால்
நான் உன்னைத் தூக்கி நடப்பேன்
உன்னை ஒரு நாளும் கைவிடமாட்டேன்
(உன் கைகளின் பிடிஇறுக்கம்தான் என்னை உறுத்துகிறது)
எப்போதும் உன்னுடன் இருப்பேன்
(ஆனால் நீ என்னைத் தேடக்கூடாது)
நான் இறந்தபிறகு நீ என்ன செய்வாய்?
(கேட்கக்கூடாத கேள்வி இது என்று
நீ உணரவில்லையா?)
மரணத்திலும் நான் உன்னைப் பிரியேன்
(ஆனால் சொற்களை நீ நம்பாதே)

Friday, February 8, 2013

சுமை

எனது விருப்பம் காரணமாகாத
ஒரு வலியின் காரணமான
ஒரு சுமையில்
சுமையே உள்ளது
எனது வலி இல்லை

எனது வலி
பெயரற்றது
எந்த அடையாளங்களுமற்றது
முடிவுறாத ஒரு பெரும் மவுனமாளிகையாய்
எப்போதும் என்முன் நின்றபடி
என் இயக்கத்தின் கட்டடத்திறனை
இறைஞ்சி நிற்பது
சுமையை இறக்கத் துணையும் தயையும் அது
சுமை
நம் திறனின்மையாலும் சோம்பலாலும் ஆனது

அத்துணை பெரிய துக்கமும் இத்துணை பயங்கரங்களும்

கண்ணில் விரல்விட்டு ஆட்டுகிறாய்
எல்லாச் சந்தோஷங்களையும்
வெட்டித் தகர்த்து
எத்துணை பெரிய துக்கத்தை ஆக்குகிறாய்

அத்துணை பெரிய துக்கமும்
ஒரு பயனுமற்றது என
மீண்டும் என் கண்ணில் உன் விரல்
அத்துணை பெரிய துக்கம்
கடக்கப்படுவதற்கோ மீண்டும் மீண்டும்
இத்துணை பயங்கரங்களும்?

பென்சில் பெட்டி

திறக்கத் தடுமாறுபவனைத்
தீரக் கவனித்து
வாய் திறந்தது
குட்டி மாணவனின்
பென்சில் பெட்டி
”நீ தேடும் பொருள்
இருக்கும் இடம் அறிவாயா?
இணை சேர்ந்த இரண்டு
மூடிகளே நான்”

Thursday, February 7, 2013

பெண்கள் எப்போதும்...

பெண்கள் எப்போதும்
என்னைக் கவர்ந்து வந்துள்ளார்கள்
அதன் ரகசியம் ஆழமானது
அது நான் ஆணாய் இருப்பதால்
எனும் அரைகுறை உண்மையால்
தகர்க்கப்பட்டதே இல்லை

பெண்கள் எவருமே துஷ்டர்களாய்
இருக்க முடியாது எனும் என் நம்பிக்கையை
எத்தனை நூறு பெண்கள் நொறுக்கிய பிறகும்
என்றும் எதனாலும் தகர்க்கப்பட
இயலாததாகவே உள்ளது அது

என் கவிதை

நான் பாட விரும்பியிருந்தேன்
ஆட விரும்பியிருந்தேன்
ஓவியனாக விரும்பியிருந்தேன்
இசைக்கவும் விரும்பியிருந்தேன்
எழுத்தை ஆளும்
தொழில் நுட்பனாகவும் விரும்பியிருந்தேன்
ஒருபோதும் பொருளை விரும்பியதில்லை எனினும்
புகழை விரும்பியிந்தேன்
உன்னைக் கண்ட பிறகோ
இவை எல்லாமே எனை விட்டு வெட்கி
விலகியது கண்டேன்
ஆகவேதான் இன்றைய என் கவிதைகளில்
ஒரு மவுனம் மட்டுமே உள்ளது
தாமரை இலையைச் சாப்பாட்டு இலையாக்கும்
சிறு தொழில்நுட்பம் மட்டுமே உள்ளது
பூர்வஜன்ம ஞாபகம்போல்
சிறிதே இசை சிறிதே நடனம் சிறிதே ஓவியம்
பாவம்போல் எங்காவது ஒட்டிக்கொண்டிருக்கிறது

அந்தியிருள்

அவன் சின்னஞ்சிறு குழந்தையல்லவா?
அந்திதோறும் கவியும் இந்தத் துயரின் அழுத்தம்
எங்கிருந்து வருகிறது? எதற்காக?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளினதுபோல்
அது வான்முட்டி வழிகிறதே எப்படி?
மாபெரும் விடைபெறல் நிகழ்ச்சியா இந்த அந்தி?
ஏன் முடிவுறாது நீள்கிறது இந்நேரம்?

Wednesday, February 6, 2013

ஒரு சிறு தவறு

வைகறை ஜன்னல் வெளியே
பீதியால் நடுங்கும் ஒளியையும்
ஓர் அதிநுட்ப உபகரணமாய்
அதிசயமானதோர் இசைக் கருவியாய்
சன்னமான காற்றையும்
தனக்குள் அனுமதித்தபடி நின்றது ஒரு மரம்

தங்கள் விலங்குக் குணத்தின்
எதிர்வினைகளைத் தொடங்கிவிட்டன
உயிரினங்கள்
அவற்றின் தந்திர வழிகளின்
முடிவற்ற திறன்களின் உச்சமாய்
முடிவற்ற சிக்கல்களுடன்
வளர்ந்த மனிதன் ஒருவன்
என் சந்தேகக் கண்முன் நின்கிறான்

ஆயிரங்கோடை வசந்தங்களாக
அக்காப் பறவை அழுகிறது
சாந்தி எனும் நிறைவேற்றம்
ஒரு நாளும் இல்லை எனும்
துயர எண்ணம்
அந்த நிறைவேற்றத்தை ஒத்திப் போடுகிறது
பாதாள உலகிலிருந்து
பூமியின் விளிம்புவரை
தன் யாழிசைத்துப் பாடியபடி
திரும்பிப் பாராமல் செல்வதினின்றும்
தவறித் தன் காதலியைத் தவறவிட்ட
*ஆர்பியஸ் அவலம்
எரிகிறது எங்கும்

எனது நாள்

எனது நாள் ஒரு பரிசுப்பொருள்
அன்பின் தேனில் நனைந்த ஆனந்தம்
எனது நாள்
தனது முகம் எனக்குக் காட்டாது
என் இதயத்தின் மேல் தன் பாதம் அழுத்தி நிற்கும்
ராட்சசம்
சுழலும் காலத்தின் கையில் சுழலும்
வாள் அநித்யம்
வாழ்வே குறிக்கோளான தேடல்
துழாவும் விரல்நுனி விழிகளின்
ஒளிபட்டு ஓடும் இருள்
சகல நோய்க்கிருமிகளுக்கும் ஆளாகிச்
சிலுவையில் அறைபடும்
நொய்மை
சித்ரவதை நிகழ்வாயிருக்கையில்
ஆனந்தம்,
இருளின் அதலபாதாளத்தில்
தயவாய்க் கசியும் ஈரத்துளியாய்
நெளியும் புழு ஆனால்
சுழலும் காலத்தையும் வாளி்ன் அநித்யத்தையும்
பரிகசிக்கும் பிரமாண்டம் அதன் உயிர்
அது துடிக்கிறது
கடல் நடுவே
அற்பத் தேவைகளின்
ஆசைகளின் தூண்டில் முள்ளில்

Tuesday, February 5, 2013

கோடை இருள்

இரவுக்கு எதிராய்
நீண்ட பகலும் தகித்தது
குழந்தைகள் தவிர
அனைவரும் புழுங்கினர்.
கோளாய் வடித்தன மாடுகள்

நதியின் மேல்தோல் சூடாக ஆக
ஆழச் சென்றுகொண்டிருந்தன மீன்கள்

மண்ணோடு முகம் புதைத்துச்
சாத்துயரில் விம்மியது ஒரு ஜீவன்
அக்காப் பறவை அழுதது
மேலும் மேலும் மென்மையானது தென்றல்
மேலும் மேலும் உறுதியாய் நின்றன மலர்கள்

அமைதியின் வானமெங்கும்
நட்சத்ரப் புண்கள்
இறந்த ஒன்றின் ஆவி
இருளில்
எல்லாவற்றையும் தனதாக்கிக்கொண்டு
என்னை மிரட்டுகிறது
பவுர்ணமி இரவில்
என்னைத் தனக்காக்கும் ஆர்வ வெறியில்
கனலும் உன் கண்கள் கண்டு
பேயாய் அலறுகிறேன்

என் தாபங்கள் விழுந்து மரிக்கின்றன
நீ எழுப்பிய பெருந்தீயில். சடாரென்று
வசந்தத்தைக் காட்டிலும் ஒளி பொருந்திய
வெறுங்கோடையாகிறது கடுங்கோடைப் பேரொலி
முதிர்காய்கள் கனியத்
தொடங்கிய திருவிழா மணம்
கோடை இருளோடு புரியும் கடும்போர்,
மீண்டும் உறக்கம் விரட்டும் போரோசை

தாய்

எவ்வளவு இளமையில் கணவனை இழந்துவிட்டாய்
கைக்குழந்தையின் சிரிப்பில் காலத்தை மறந்தாய்
இன்னும் என்னென்ன நினைவுகளில்
எப்போதும் உன்னைப் புதைத்துக்கொண்டாய்
நினைவுத் துயர்களால் கன்றியிருந்த உன் முகத்தை
வெளிப்பாடுகள் இன்றிப் புதையுண்டிருந்த உன் மவுனத்தை
தாய் எனும் படிமம் இதமாய்ப் போர்த்தக்
குளிர் காய்ந்தனையோ
எவ்வளவு கொடை உள்ளம் வந்துவிட்டது உனக்கு
உன்னால் பராமரிக்கப்பட்டு
வளர்ந்து பெரியவர்களான உறவுக் குழந்தைகளும்
ஒவ்வொருவராய் உன்னிடமிருந்து விடைபெற்றுக்கொண்டனர்
உன் சொந்தமகன் அதுவும் உன் கணவனின் சாயலில்
வளர்ந்து நிற்கிறதில்தான் உனக்கு எவ்வளவு மகிழ்ச்சி
உன் சாதனையோ உன் பிரார்த்தனைகளின் பலிதமோ
நீ சொன்னவாறெல்லாம் அவன் கேட்கிறான்
உன்மீது அவன் உயிராய் இருக்கிறான்
இனி என்ன
வெற்றி உவகையுடன் உன் கடமையை யோசிக்கிறாய்

மருமகள் தேடி நீ அலைந்த சுயம்வரத்திலிருந்து
மணப்பந்தலில் உற்றார் உறவினரெல்லாம் சூழ்ந்த
உணவுப் பந்தியில் வரை...
எப்படி பொங்கி வழிந்தது
அதுநாள் வரை நீ கண்டறியாத குதூகலம்

இன்று உனக்கு என்ன வந்துவிட்டது
மகனுக்கும் மருமகளுக்குமிடையே புகுந்து
வெளியே சொல்லக் கூசும் செயல்களைக்
கூசாமல் செய்கிறாய்
உளவியல் அறிஞனாய் மலர்ந்த ஜெர்மன்
நரம்பியல் நிபுணன் ஒருவனின் கெக்கெலி
கேட்கவில்லையா உன் தனிமையின் முகடுகளில்?
உன்னை நீ வாசிப்பாயா?
அந்தப் புத்தகத்திலில்லாதது வேறெங்குமில்லை

Monday, February 4, 2013

பாவப்பட்ட ஜனங்களில் ஒருத்தி

பாவப்பட்ட ஜனங்களில் ஒருத்தி
சோலையம்மாள்
எந்த மர்மமும் அவளைப் பிடித்துப்
பிழியவில்லை
பொங்கிப் பொங்கி வருகுது ஆனந்தம்
அவளுக்கிந்த வாலைப் பருவத்தில்
பாடப் புத்தகங்களை ஏங்கச் செய்த
தீப்பெட்டிப் பசையாலும் சிறுசிறு சுமைகளாலும்
பாதிக்கப்படாதிருந்தது
அவளது பேதைப் பருவத்திலும் ஆனந்தம்
பாட்டி கதைகள் விடுகதைகள்
பயமறியாக் கன்றின் ஆட்டபாட்டங்களால்
தன் தோழர்களுக்கெல்லாம் ராணி அவள்

கல்யாணமாகியது சோலையம்மாளுக்கு
விநோதமாய் மினுங்கியது
காதிலும் கழுத்திலும் சிறு பொன் அணி
தலையில் எப்போதும் பூச்சரம் முழித்தது
புடவையின் பகட்டும் ஒட்டாமல் சிரித்தது
பொங்கிப் பொங்கித் ததும்பும் அந்த
ஆனந்தம் அப்போதும் அழியாதிருந்தது

சின்னாள் வசந்தம் அவளறியாள்
ஆயிரம் சோலையம்மாள்கள் சரித்திரம்
அவனறிந்தது போல் தோன்றும்
அன்னாள் சிறுவன் அவன் துயர் ஓர் புதிர்

உளறலின் இரகசியம்

சிரத்தையான அலங்காரங்களுடன் வந்து
தன்னைத் தொலைக்காட்சிப் பேட்டி எடுக்கும்
வனிதாமணியை விலக்கி,

காமிராவை உற்று நோக்கியபடி
பேட்டி கொடுக்கும் புள்ளியின்
கெட்டிக்காரத்தனம்
போதாது

அவனை உள்வாங்கும் காமிராவின்
ஒற்றைக் கண்ணை
அவன் தனது ரசிக மன்றப்
பாமரஜனமாய் உருவகித்திருக்கிறான்

Sunday, February 3, 2013

வெளிப்படுத்தல்கள்

அதிகாலை அணில்களின் நீண்ட கீச்கீச்களிலும்
அக்காக் குருவிகளின் அக்கூவல்களிலும்
நடுநிசி நாயின் ஊளையிலும்
காணும் அந்த வேதனையைத் தூண்டும் அம்சம்
என்னை எனக்கு வெளிப்படுத்தியதாய்
மர்ம்மாய்ச் சொல்வதுதான் அழகா?

நீர் நிறைக் கண் பரிசாரகன் ஏந்திநிற்கும் தட்டைப்போல்
இதோ இவ்வேளை என் மேஜையாகி நிற்பது எது?
மேஜை விளக்கெரிய உருவாகும் இக்கவிதைகளில்
உயிர்கள் மீதான ராக்காவல் பணியொன்று
ஒளிந்திருக்கிறதாய்
நான் வெளிப்படையாய்ச் சொல்வது அழகில்லையோ?

அந்தியிருள் சூழ்கையிலெல்லாம்
நெஞ்சைக்கவ்வும் ஒரு பிரும்மாண்டத்திடமிருந்து
என்னை நான் காத்துக்கொள்ள இயலாதிருப்பதில்
ஒளிந்திருக்கிறது அந்த மர்மம்
என நான் வெளிப்படையாய்ச் சொல்வதில்
வெளிப்படையே இல்லையா அல்லது போதாதா?

பிரச்னைகளின் உலகில்
பாடும் குரலவளை நெரிபடும் கவிஞன்
அப்போதும் முனகுவான்
ஆனந்தத்தில் உருப்பெற்ற அப்பாடலை
”தீர்வுகள் தேடுவதற்கான பிரச்னையா வாழ்க்கை,
வெளிப்படுத்தல்கள் வேண்டி நிற்கும் புதிர் அல்லவா அது”

இந்திய ஞானிகள்: நான்கு காட்சிகள்

இரும்பு பீரோவின்
சாவியினைக் கொடுத்திருந்தோம்
எங்கள் ஞானியிடம்
எழுந்து நடந்து செல்லும் பீரோ கண்டு
திருடன் திருடன் என்று கூச்சலிட்டோம்
கவலை வேண்டாம்
சாவி எம்மிடம் என்றார்
எங்கள் ஞானி

இரும்பு பீரோவின்
சாவியினைக் கொடுத்திருந்தோம்
எங்கள் ஞானியிடம்
மெலிந்து நலிந்து வரும் பீரோ காட்டி
உழைப்பு உழைப்பு என்றார் ஞானி
கவலை வேண்டாம்
உழைப்போம் குவிப்போம்
என்றனர் மக்கள்

இரும்பு பீரோவின்
சாவியைக் கேட்டார் ஒருவர்
ஈதென்ன புதுப்பழக்கம்
நீ தொட்டால் தீட்டு, ஒத்து ஒத்து என
விரட்டினார் ஞானி
ஓடிப்போய்க் கூட்டத்துள்
ஒளிந்து தப்பித்தார் அவர்

இரும்பு பீரோவின்
சாவியினைக் கொடுத்திருந்தோம்
புதிய ஞானிகளிடம்
எழுந்து நடந்து செல்லும் பீரோ கண்டு
திருடன் திருடன் என்று கூச்சலிட்டோம்
கவலை வேண்டாம்
சாவி எம்மிடம் என்றனர்
புதிய ஞானிகள்
சாவி ஒன்றே நம் சொத்து
என்றனர் மேலும் அவர்கள் தெளிவாக

Saturday, February 2, 2013

சிறுத்தையுடன் ஒரு நேர்காணல்

ஜீவராசிகளிலேயே
அச்சந் தரத்தக்க
மிகக் கொடிய மிருகம்
நீதான், இல்லையா?

இல்லை, அது நீதான்

ஆக, உனக்கும் அச்சம் இருக்கிறது

ஆம்

நீ ஒரு மாபெரும் சக்தி
உள்ளுரம் செறிந்த
ஓர் உன்னதத்தின்
ஜீவ உருவகம்
அழகின் உக்கிர ரூபம்

அதெல்லாம் எனக்குத் தெரியாது
ஆனால் சந்தோஷமாயிருக்கிறது
நீ சொல்வது கேட்க
நன்றி

அச்சம் ஒன்றே உன் குறைபாடு, இல்லையா?

அச்சம் அஞ்சாமை எனும் சொற்கள்
உங்கள் மொழியினுடையவை
உங்கள் பிரச்னைகளை எதிரொலிப்பவை
நான் அறிந்ததெல்லாம் ஒன்றே.
சக்தி.
என்னை முடுக்கும் விசை என்று ஏதுமில்லை
நானே விசை
சலிப்பாயிருக்கிறது எனக்கு
எல்லாவற்றிற்கும் உன் மொழியிலேயே
பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன்

அச்சம் இல்லை என்கிறாயா?

இருக்கிறது. ஆனால் அதைத் தொடர்ந்து
பெருகிவரும் சிக்கல்கள் என்னிடம் இல்லை

சரி. என்னைப் பற்றி
என்ன நினைக்கிறாய்?

உன்னைப் பற்றியே உனக்கெப்போதும் கவலை.
அதுவே உன்னை மிகப் பரிதாபகரமானவனாக்குகிறது
நீயும் சக்திதான்
ஆனால் சுடரும் விளக்குகளும்
பாதுகாப்பான இரும்புப் பேழையுமான
உனது சக்திமிக்க வாகனம்
உன்னிலிருந்து தனிப்பட்டது போலவே
உன்னிலிருந்து உன் சக்தியைப் பிரித்துவிட்டாய்
அவை உன்னை அடிமைப்படுத்திவிட்டன
உன் அச்சத்திற்கும் காரணமாகிவிட்டன
அஞ்சி அஞ்சியே கோழையானாய்
கோழைத்தனத்தை மறைக்க எண்ணி
மிகக்கொடூரமான மிருகமும் ஆகிவிட்டாய்

ஆனால் உனக்குத் தெரியுமா
இப்போது நான் துப்பாக்கியுடன் வரவில்லை

மிக்க மகிழ்ச்சி
பார்த்துவிட்டாயல்லவா
போய் வா
வாழ்த்துக்கள்
எல்லா நலமும் உண்டாகட்டும்

சிறுத்தை காட்டுக்குள்ளும்
கார் நகருக்குள்ளும்
மறைந்தன

Friday, February 1, 2013

சிறை

இந்தச் சுவர்களுக்கு அப்பால்
மாசு படியாத வானமும்
கம்பீரமான மலைகளும்
குளிர்ந்த மேகங்களும்
ஒளி படர்ந்த புல்வெளியும்
நகமறியாத பூக்களும்
விளையாடும் குழந்தைகளும்
துயரக் காட்சிகள் மறந்த காற்றும்
வெள்ளி மீன்கள் உலவும் ஒரு நீர்நிலையும்
இருக்கக்கூடும் என
சுவர் உடைத்தேன்
கண்டது:
மற்றோர் அறையும்
அதில் என்னைப்போல் ஒருவனும்

இருவரும் சேர்ந்து
மீண்டும் ஒரு சுவர் உடைத்தோம்
கண்டது
மற்றோர் சுவரும்
எம்மைப் போல் இருவரும்

நால்வரும் சேர்ந்து
கண்டது மற்றோர் சுவரும்
இன்னோர் நால்வருமே

இவ்வாறாய் இவ்வாறாய்
எங்கள் தொகை பெருகி
கண்டடைந்தோம்
எங்கள் இரத்தத்திலும் விழிகளிலும்
கனன்றெரிந்த அந்த பூமியை

தரிசு

குண்டு தகர்த்ததொரு கோட்டையைப்போல
எங்காவது காணப்படக்கூடுமோ ஒரு மனிதச்சடலம்?
வெடித்துச் சிதறினாற் போன்ற
மொட்டை மெட்டைப் பாறைகளுடன்
விரிந்து காணப்படும் இந்தத் தரிசு நிலம்
பூமி முழுக்கக் கால்கொண்டிருந்த கோட்டை ஒன்றின்
சிதிலம்தானோ?

வேண்டாம் வேண்டாம் ஒரு கணத் தாமதமும்.
கடந்து செல் கடந்து செல்.
என் இனிய வாசகனே, காரோட்டியே,
கடந்து செல் வேகமாய் இந்தத் தரிசு நிலத்தை

கண்ணிகளிற் சிக்கிய வெண்பறவைகளாய்த்
திடுக்குறவைக்கும்
இந்த வீட்டுமனைத் திட்டக் கற்களை;
பறவைகள் பதற்றம்கொள்ள
மெல்லிய பாலிதீன் பைகள் சிக்கித்துடிக்கும்
முட்செடிகளை;
கடற்கரைப் பிரகாரமெல்லாம் உலவும்
பேய்க்கணங்களை;
விண்ணின் உதிரம்கொட்ட
சதை கிழிக்கும் உயர் ஊசிக்கோபுரங்களை;
மண்ணின் பச்சை இரத்தம் உறிஞ்சும்
பகாசுரத் தொழிற்சாலைகளைக்
கடந்துசெல், கடந்துசெல்.

பூமி விட்டு மிரண்டோடிச் சென்று
மீன் மட்டுமே பிடுங்கிவரும் விசைப்படகுகள்,
கடலை மூடிவிடக்கூடும் நம் கழிவுகள்
மவுனப் பறவைகள்
கரையேற முடியாப் பாழ்கடல்
பாழ்மண்டபப் பனைவெளிகள்
பழுதாகும் வாகனம்
வழிமறிக்கும் இந்த இரவு
இந்த அறை
கோயில் திருவிழா,
சாராய மேளத்திற்குச் சாமியாடும் பக்தர்கள்
கோமாளித் தலைவன்களுக்குக் கூடும் இளிச்சவாயர்கள்
நவமனிதக் கொசுக்கள்,
மூட்டைப்பூச்சிகள்,
கரப்பான்கள்...

”நம்மால் இருக்கமுடியுமா இங்கே?
நாம் என்ன செய்ய இருக்கிறது இங்கே?”
என்ற கேள்விகளின் செவிட்டில் விழும் அறை!
உனக்குத் தெரியுமா?
தம் பயன்பாட்டைத்
துல்லியமாகவே அறிந்தவை
இந்த பாலிதீன் பைகள்.
இக் கிரகத்துக்குள்ளே
வேறு ஒரு கிரகத்தையும்
இரகசியமாய் அறிந்தவைதான்
இந்தப் பறவைகளும்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP