சிறுத்தையுடன் ஒரு நேர்காணல்
ஜீவராசிகளிலேயே
அச்சந் தரத்தக்க
மிகக் கொடிய மிருகம்
நீதான், இல்லையா?
இல்லை, அது நீதான்
ஆக, உனக்கும் அச்சம் இருக்கிறது
ஆம்
நீ ஒரு மாபெரும் சக்தி
உள்ளுரம் செறிந்த
ஓர் உன்னதத்தின்
ஜீவ உருவகம்
அழகின் உக்கிர ரூபம்
அதெல்லாம் எனக்குத் தெரியாது
ஆனால் சந்தோஷமாயிருக்கிறது
நீ சொல்வது கேட்க
நன்றி
அச்சம் ஒன்றே உன் குறைபாடு, இல்லையா?
அச்சம் அஞ்சாமை எனும் சொற்கள்
உங்கள் மொழியினுடையவை
உங்கள் பிரச்னைகளை எதிரொலிப்பவை
நான் அறிந்ததெல்லாம் ஒன்றே.
சக்தி.
என்னை முடுக்கும் விசை என்று ஏதுமில்லை
நானே விசை
சலிப்பாயிருக்கிறது எனக்கு
எல்லாவற்றிற்கும் உன் மொழியிலேயே
பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
அச்சம் இல்லை என்கிறாயா?
இருக்கிறது. ஆனால் அதைத் தொடர்ந்து
பெருகிவரும் சிக்கல்கள் என்னிடம் இல்லை
சரி. என்னைப் பற்றி
என்ன நினைக்கிறாய்?
உன்னைப் பற்றியே உனக்கெப்போதும் கவலை.
அதுவே உன்னை மிகப் பரிதாபகரமானவனாக்குகிறது
நீயும் சக்திதான்
ஆனால் சுடரும் விளக்குகளும்
பாதுகாப்பான இரும்புப் பேழையுமான
உனது சக்திமிக்க வாகனம்
உன்னிலிருந்து தனிப்பட்டது போலவே
உன்னிலிருந்து உன் சக்தியைப் பிரித்துவிட்டாய்
அவை உன்னை அடிமைப்படுத்திவிட்டன
உன் அச்சத்திற்கும் காரணமாகிவிட்டன
அஞ்சி அஞ்சியே கோழையானாய்
கோழைத்தனத்தை மறைக்க எண்ணி
மிகக்கொடூரமான மிருகமும் ஆகிவிட்டாய்
ஆனால் உனக்குத் தெரியுமா
இப்போது நான் துப்பாக்கியுடன் வரவில்லை
மிக்க மகிழ்ச்சி
பார்த்துவிட்டாயல்லவா
போய் வா
வாழ்த்துக்கள்
எல்லா நலமும் உண்டாகட்டும்
சிறுத்தை காட்டுக்குள்ளும்
கார் நகருக்குள்ளும்
மறைந்தன