வெளிப்படுத்தல்கள்
அதிகாலை அணில்களின் நீண்ட கீச்கீச்களிலும்
அக்காக் குருவிகளின் அக்கூவல்களிலும்
நடுநிசி நாயின் ஊளையிலும்
காணும் அந்த வேதனையைத் தூண்டும் அம்சம்
என்னை எனக்கு வெளிப்படுத்தியதாய்
மர்ம்மாய்ச் சொல்வதுதான் அழகா?
நீர் நிறைக் கண் பரிசாரகன் ஏந்திநிற்கும் தட்டைப்போல்
இதோ இவ்வேளை என் மேஜையாகி நிற்பது எது?
மேஜை விளக்கெரிய உருவாகும் இக்கவிதைகளில்
உயிர்கள் மீதான ராக்காவல் பணியொன்று
ஒளிந்திருக்கிறதாய்
நான் வெளிப்படையாய்ச் சொல்வது அழகில்லையோ?
அந்தியிருள் சூழ்கையிலெல்லாம்
நெஞ்சைக்கவ்வும் ஒரு பிரும்மாண்டத்திடமிருந்து
என்னை நான் காத்துக்கொள்ள இயலாதிருப்பதில்
ஒளிந்திருக்கிறது அந்த மர்மம்
என நான் வெளிப்படையாய்ச் சொல்வதில்
வெளிப்படையே இல்லையா அல்லது போதாதா?
பிரச்னைகளின் உலகில்
பாடும் குரலவளை நெரிபடும் கவிஞன்
அப்போதும் முனகுவான்
ஆனந்தத்தில் உருப்பெற்ற அப்பாடலை
”தீர்வுகள் தேடுவதற்கான பிரச்னையா வாழ்க்கை,
வெளிப்படுத்தல்கள் வேண்டி நிற்கும் புதிர் அல்லவா அது”