தரிசு
குண்டு தகர்த்ததொரு கோட்டையைப்போல
எங்காவது காணப்படக்கூடுமோ ஒரு மனிதச்சடலம்?
வெடித்துச் சிதறினாற் போன்ற
மொட்டை மெட்டைப் பாறைகளுடன்
விரிந்து காணப்படும் இந்தத் தரிசு நிலம்
பூமி முழுக்கக் கால்கொண்டிருந்த கோட்டை ஒன்றின்
சிதிலம்தானோ?
வேண்டாம் வேண்டாம் ஒரு கணத் தாமதமும்.
கடந்து செல் கடந்து செல்.
என் இனிய வாசகனே, காரோட்டியே,
கடந்து செல் வேகமாய் இந்தத் தரிசு நிலத்தை
கண்ணிகளிற் சிக்கிய வெண்பறவைகளாய்த்
திடுக்குறவைக்கும்
இந்த வீட்டுமனைத் திட்டக் கற்களை;
பறவைகள் பதற்றம்கொள்ள
மெல்லிய பாலிதீன் பைகள் சிக்கித்துடிக்கும்
முட்செடிகளை;
கடற்கரைப் பிரகாரமெல்லாம் உலவும்
பேய்க்கணங்களை;
விண்ணின் உதிரம்கொட்ட
சதை கிழிக்கும் உயர் ஊசிக்கோபுரங்களை;
மண்ணின் பச்சை இரத்தம் உறிஞ்சும்
பகாசுரத் தொழிற்சாலைகளைக்
கடந்துசெல், கடந்துசெல்.
பூமி விட்டு மிரண்டோடிச் சென்று
மீன் மட்டுமே பிடுங்கிவரும் விசைப்படகுகள்,
கடலை மூடிவிடக்கூடும் நம் கழிவுகள்
மவுனப் பறவைகள்
கரையேற முடியாப் பாழ்கடல்
பாழ்மண்டபப் பனைவெளிகள்
பழுதாகும் வாகனம்
வழிமறிக்கும் இந்த இரவு
இந்த அறை
கோயில் திருவிழா,
சாராய மேளத்திற்குச் சாமியாடும் பக்தர்கள்
கோமாளித் தலைவன்களுக்குக் கூடும் இளிச்சவாயர்கள்
நவமனிதக் கொசுக்கள்,
மூட்டைப்பூச்சிகள்,
கரப்பான்கள்...
”நம்மால் இருக்கமுடியுமா இங்கே?
நாம் என்ன செய்ய இருக்கிறது இங்கே?”
என்ற கேள்விகளின் செவிட்டில் விழும் அறை!
உனக்குத் தெரியுமா?
தம் பயன்பாட்டைத்
துல்லியமாகவே அறிந்தவை
இந்த பாலிதீன் பைகள்.
இக் கிரகத்துக்குள்ளே
வேறு ஒரு கிரகத்தையும்
இரகசியமாய் அறிந்தவைதான்
இந்தப் பறவைகளும்!