ஓர் ஒளிக்கற்றை
மாசுபட்ட இப்பூமி
புழு வைத்த சிறு இலந்தைப்பழம்போல் ஆக
பிரபஞ்சவெளி வீதியில்
அகண்ட நதிபோல் நீண்ட ஓர் ஒளிக்கற்றையாய்
வந்து நின்றது அது
அறைக்குள் புகுந்து
மூளையெங்கும் ஊடுருவி
இரவெல்லாம் உரையாடி
இந்த அமைதியான காலையிலும்
அவ்வாறே நிறைந்து நின்றது
விடைபெற நிற்கிறதா?
எல்லாவற்றையும் கூட்டிச் சுருக்கிய
இறுதி வாக்கியமாய்
என்ன சொல்ல முயல்கிறது?
சொல்லிவிட்டதா? போய்விட்டதா?
ஆம்
என் அறை அமர்ந்திருக்கும் இப்பூமி
மகாவிஸ்தீரணமாகும்படி
தூரத்தே போய்விட்டது
அது என்னோடாடிய உரையாடல் -
வார்த்தைகளில் இல்லை அது
ஒரு பேரமைதி நிம்மதி சாந்தி
அது மட்டும் எப்போதும்
தன் பிரம்மாண்டம் மாறாமல்
தங்கிவிட்டது