புல்லாங்குழல்
அபூர்வமாய்த் திறந்திருந்த தோட்டம்
துள்ளி ஓடிய ஒற்றையடிப் பாதையின்
ஓரத்துப் புல்தரையில் ஒரு புல்லாங்குழல்
ஏகாந்த மவுனத்தின் காலடியில் அனாதையாய்
தாவரங்களின் மெல்லிய அசைவில்
இருத்தல் பற்றிய விவாதம்.
பறவைகளின் குரல்கள் அதற்குத் தூபம்போட
தாமரைக் குளத்தில் தவளை விழும்
தாளம் அதற்கு முத்தாய்ப்பிட
அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தது புல்லாங்குழல்
யாரோ ஒரு வித்வான் தவறவிட்டிருந்தான் அதனை அங்கே
(அங்கே வருவோர்க்கெல்லாம் அநேகமாய் அது ஒரு வழக்கம்)
அவன் மாற்றுப் புல்லாங்குழலோடு
பாட்டிசைத்துக் கொண்டிருப்பான்
ஊருக்குள்ளே இந்நேரம்
தோட்டத்துப் பணியாள் ஒருத்தியின் குழந்தை
அப்புல்லாங்குழலைக் கையிலெடுத்து
புபு என்று ஊதி ஊதிப் பார்த்து ஓய்ந்தது
அவளும் தனக்குப் பயன்படாதது கருதி
விட்டுவிட்டாள் சருகுகளோடு சருகாய்
விம்மியது புல்லாங்குழல்
சிதறிக்கிடந்த பருக்கைகளைக் கொறிக்கவந்த அணில்கள்
அப்புல்லாங்குழலைத் தீண்டிவிட்டு விலகிக்கொண்டன
கிளையிலிருந்து குதித்த குரங்கு ஒன்று
கைதேர்ந்த வித்துவான்போல் கையிலெடுத்து சோதித்துவிட்டு
சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என
விட்டெறிந்தது தூரே
மூங்கிற் புதர் மடியில் போய்
வீழ்ந்தது புல்லாங்குழல்
அதுவரை திகைத்து நின்றிருந்த அவன்
லேசான மனத்துடன் நடக்க ஆரம்பித்தான்.
தோட்டத்தைவிட்டு வெளியே வந்தபோது
நகரத்தின் இரைச்சலுக்கு மத்தியிலிருந்து
ஒரு புல்லாங்குழலிசை கேட்டது
புல்லாங்குழல் ஒன்றை
வாசித்துக்கொண்டிருக்கும் இதழ்போல்
நெடிதுயர்ந்த மரங்களுக்கிடையே சூர்யன் தகித்தது