உயரம் ஏறுபவன்
உயரம் ஏறி ஏறிச்
சிறுத்தையான உடலுரம்
மனித குணங்களிலே மேலான
அடக்கப் பண்புக்கு அவனே உதாரணம்
தொழிலிலோ நிபுணன்
நியாயமான கூலியையே பேசினான்
ஏதோ ஒன்றுக்குக் கட்டுப்பட்டவன்போல்
கயிற்று வளைக்குள்
கால்களை இட்டுச்
சர சரவென்று ஏறினான் உயரம்
சரக் சரக் கென்று நாலே வீச்சில்
தள்ளினான் தென்னங் குலைகளை
ஆம் அவன் செயல்திறமே ஒரு தீரம்
அவன் ஒவ்வொரு செயலிலும்
பாளையருவாளின் கூர்மை
கொண்டைக்கு வெயில் பாய்ச்ச
அவன் கழித்துத் தள்ளிய
தென்னோலைகள்
கிரீச்சிட்டு அவன் புகழ் பாடியபடியே
காற்றில் தவழ்ந்து தரையை வணங்கின
தேங்காய்களைத் தொலித்துக்கொண்டே
அவன் சொன்னான் சுற்றுப் புற முகவரிகளை;
அவனை எங்கே எங்கே எனத் தேடும் வாடிக்கையாளர்களை.
ஒரு பொய் இருக்கக் கூடாது
ஒரு களவு இருக்கக் கூடாது என
அந்த இரகசியத்தையும் அவன் வெளிப்படுத்தினான்
அந்தத் தென்னைகளின் நோயினை அறிந்திருந்தான்
மருந்துப் பையையும் எப்போதும் அவன் சுமந்தான்
நோய் தீர்ந்து காய்த்துக் குலுங்கப் போகும்
காட்சியினைச் சித்தரித்தான் கவிஞனைப்போல்
பரம்பரைத் தொழில்காரன்
உயரம் ஏறி இருக்கையில்தான்
பிடி தளர்ந்து
தென்னங் குலைபோல் விழுந்து
மரித்தாராம் அவன் தந்தை
மூன்று தென்னைக்கு மருந்து வைக்க
அறுபது ரூபாய்
இரண்டு தென்னைகளும் ஏறி இறங்க
பதினாலு.
இருந்தது ஐம்பதே ரூபாய்
மாசக் கடைசியானதால் மிச்சக் காசை
நாள மாலையே தருவேன் என்றதற்கு
தாராளமாய் ஒப்புக்கொண்டான்
ஆரஞ்சுப் பழ அளவே தேறிய
இருபத்தைந்து காய்களைத் தொலித்துத் தரக்
காசு வேண்டாமென்றிட்டான் கருணாகரன்
ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன்
மீதி 24 நாளை மாலை என்றேன்
மீண்டும் அதுக்கென்ன சார் என்றான்
என் தயக்கத்தைப் பரிகசிப்பவனாய்
மறுநாள் மாலை வந்தவனிடம் கொடுக்க
நாலு ரூபாய் சில்லறையே இருந்தது
உடைக்க முடியாத இன்னொரு
ஐம்பது ரூபாயை அவனிடம் கொடுத்து
சில்லறைக்கு அனுப்பினேன்
திரும்பிவரவில்லை அவன்
தென்னைகளின் சிரிப்பில் அவன் தெரிந்தான்
திருட்டுப் பூனைகளின் விழிகளில் அவன் தெரிந்தான்