இந்த இரவில்
இந்த இரவில் அறையப்பட்டு
ஒழுகும் இரத்த காயங்களுடன்
தாகவிடாயால்
உயிருடன் இறந்துகொண்டும்
இறந்து உயிர்த்துக்கொண்டும்
ஒரு ஜீவன்பாடும் அவஸ்தையை நீ அறிவாயா
உன் வானத்தை இடிமின்னல் கிழிக்கும்போது,
புயற்காற்று உன் விளக்குகளையெல்லாம் அணைக்கும்போது,
உன் கதறலைப் பொருட்படுத்தாத ஒரு மவுனவெளி
உன்னைத் திடுக்குறவைக்கும்போது?
அழுத்தும் இந்த வேதனை
மனிதவாசமற்ற பனிமுகடுகளில் திரியும்
பனிமனிதனின் காலடிப் பதிவுகளினாலா?
எந்த ஓர் இரகசியச் செயல்பாட்டின்
பொருள் புரியாத வலி இந்தத் தனிமை?
இந்தக் கொடூர உலகில்
சிறு அதிர்ச்சிக்கும் தாளாது மாண்டுவிடும்
மென்னுயிர்கள் ஆயிரத்தின் கல்லறைகள் மீதே
வீடுகொண்டிருக்கும் அவனுள் குடி கொண்டுவிட்டதோ
அந்த
மென்னுயிர்களின் ஆவிகள்?
யாருமறியாத இம்மூளைப் பிரபஞ்சத்தில்
யாரோ செய்யும் கதிர்ச் சிகிச்சையின்
படுத்தல்களோ இந்த வலி?
துயின்று கொண்டிருக்கும் மனிதகுமாரனின் தலையில்
ராவோடு ராவாக ராஜ்யபாரம் துறந்து ஓடிப்போன
கடவுள் தன் மணிமுடியைச்
சூட்டிவிட்டதால் வந்த பாரமோ?