குட்டிச் சூர்ய அருவி
அந்தப் பிரதேசத்தில்
அது கோடை காலமானாலும்
அதிகாலையானதால்
இயற்கை நீண்ட புல்வெளியாய் இருந்ததாலும்
குளிர்ச்சியாக இருந்தது
அடிவானத்தில் வழிந்துகொண்டிருந்தது
ஒரு குட்டிச் சூர்ய அருவி
தானாய் உருவான ஒரு பாதையில்
சக்கர நாற்காலி உருண்டு கிடந்தது
தளர்நடைக் குழந்தையையும் தாயையும் பார்த்து
ஒரு சிறு காட்டுப்புல்பூ அசைந்துகொண்டிருந்தது
நீண்ட மவுனம் போன்ற தூரத்தில்
அதே மாதிரி ஒரு குழந்தையும் தாயும்
புல்வெளியிட்ட முள்வேலிக்குள்
இரண்டு பேருக்குமிடையே உரையாடலற்ற
மவுனத்தின் விரிப்பு
உரையாடலற்ற மவுனம்
குழந்தைகளின் தசை துடிக்கும் உடலசைவுகளாலும்
வாய் கிளப்பும் கூச்சல்களாலும்
தாய்மார்களின் பரஸ்பர புன்னகைகளாலும்
விரிய விரும்பியது.
அது கடுங்கோடை காலமானாலும்
காலத்தை வென்று நின்றிருந்தது அந்தப் பொழுது.
தொடுவானத்தில் வழிந்துகொண்டிருந்த
குட்டிச் சூர்ய அருவி
சற்றே வளர்ந்தது
அத்துடன் வேலிமுட்களின் கூர்மையும்
முள்வேலிக்குள்
முழுவளர்ச்சியடைந்த ரோஜா ஒன்று
தன்னை ஒட்டிவளர்ந்திருந்த மொட்டின் மீது
தலைசாய்த்து
வீணாய் மலர்தலைப் போதித்துக்கொண்டிருந்தது
ஆனாலும் அவசியமாயிருந்தது அதன்
வளர்ச்சிக்குப் பின்னும் நுனி வாடிக் கருகி நிற்கும்
அருகாமைச் சோகம்
அன்பை ஒருகை மறுகைக்குப் பரிமாறிக்
கொண்டிருக்கையில்
அந்த ரோஜா இதழ்களில் ஏற்படும் அசைவு
முற்றிலும் புரிந்துகொள்ளப்படாத சோகத்தால்
அந்தப் பிரதேசமெங்கும் துடிக்கிறது
கடுங்கோடை ஆரம்பமாகிறது