விடிவு
1.
எத்தனைமுறை இரத்த வெள்ளத்தில்
மாண்டு மரித்தாலும் திரும்பத் திரும்பப்
புத்துயிர் முறுவலுடன் எழுகிறான் சூரியன்
அவ்வேளை
இரவின் ஆழத்துள் கனன்றெரிந்த
கோடானு கோடி நட்சத்ரப் புண்கள்
எங்கு போயின?
மறைந்திருந்து தாக்கும் அவற்றை முன்னுணர்ந்து
அலறும் சூரியன்
மரித்தபின்
எந்த ஒரு தீண்டலால்
திரும்பத் திரும்ப உயிர்த்தெழுகிறான்
ஒரு சிறு கறையுமின்றி?
தன் அனுபவப் புண்கள்
கோடானு கோடிப் புண்களெங்கும் எதிரொலித்து
அவனைத் தாக்கி அழிக்கவும்
அவன் எவ்வாறு இடம் கொடுத்தான்?
2.
இந்த வானத்தின் இருளும்
ஒளியின் சுக்கல் சுக்கல்களான விண்மீன்களும்
நெஞ்சை அடைக்கின்றன
என் விழி ஓடி ஓடி அழுதபடி
அந்த மீன்களைப் பொறுக்குகின்றது
என் வேதனைமேல் கருணை கொண்டு
ஒன்றோடொன்று தாங்களாய் இணைந்து
தங்கள் எண்ணிக்கையைக் குறைத்தபடி இருந்தன
காலை என உதித்தது
சிதறாத ஒளி ஒன்று