வீட்டின் முன் ஒருவன்
வீட்டிற்குள் வீட்டை விரும்பாத ஏதோ ஒன்று
அவனை எப்போதும் வீட்டின் முற்றத்திற்கே துரத்துகிறது
வானத்தின் ஒளிவெள்ளத்தில் மிதக்கும் முற்றத்தின்
பச்சைத் தீவுதான் அவன் விரும்பும் இடமோ?
எவ்வேளையும் வீடு தன்னகத்தே வைத்திருக்கும்
சிறு இருளோ அவனைத் துரத்திக்கொண்டே இருப்பது?
படுக்கைநீள ஜன்னல் ஒளியில்
அவன் குளித்துக்கொண்டிருக்கும் போதும்
கட்டிலுக்கடியிலும் அறைமூலைகளிலும்
அது மவுனமாய்ப் பதுங்கியிருக்கிறது
முந்தானையை இழுத்துச் செருகி
பெருக்குமாற்றைத் தூக்கிக்கொண்டு நிற்கும் அவள் கோலம்
அந்த இருளுக்கெதிரான சீற்றம்போல் கனலக் காண்கிறேன்
ஆனால் அத்தனை நிதானமும் அத்தனை அழகும் ஒளிவீச
தூசுப் படிவுகளையும் கசங்கிய காகிதங்களையும் ஒதுக்குவதுபோல்
அந்த இருளை அவள் விரட்டுகிறாள் எவருமறியாமல்.
இருந்தும் வீட்டுக்குள் வீட்டை விரும்பாத ஏதோ ஒன்று
அவனை விடாமல் துரத்திக்கொண்டேயிருக்கிறது முற்றத்திற்கு.
வீட்டிற்கு முந்தைய ஆதி நாடோடிக் காலமொன்று
அந்தப் பச்சைவெளியில் பருவகாலங்கள் போல்
நிலைகொள்ளாமல் சென்றுகொண்டேயிருக்கிறது
இந்தப் பக்கமோ ஆழமற்ற அத்திவாரங்களுடன்
வளர்ந்து வளர்ந்து நிற்கும் வீடுகள்
கட்டடங்கள் நகரங்கள் நாடுகள் நாகரிகங்கள்
திடீர் திடீரென்று சரிந்து ஓலமிடும் அழிவுகள்
என்றாலும் வீடு என்று ஒன்று வேண்டவே செய்கிறது
மனிதனை மனிதனிடமிருந்து அது பிரித்தாலும்
போர்க்காலத்துப் பதுங்குகுழிகள் போல அவை செயல்பட்டாலும்.
நுழைவாயிலேயே நின்றுவிட்ட கோலம் போல்.
முற்றத்தில் நின்றுகொண்டிருக்கும் அவனிடம்
யாரோ சொல்கிறார்கள்: ”நல்ல மனிதர்கள்
தம் வீடுகளைத் தம் வீடுகளினின்றே பாதுகாத்துக்கொள்கிறார்கள்”
நாடோடியாய் அலைந்துகொண்டிருந்த ஒரு யாத்ரீகன் அவன்
இன்று ஒரு வீட்டின் முன்னே நின்றுகொண்டு
வீதியையே பார்த்துக்கொண்டிருக்கிறான்
நிலையான அச்சித்திரத்தின் முன்னே
வந்து மறைந்துகொண்டிருக்கின்றனர் பயணவழிப்போக்கர்கள்
பயணவழிப்போக்கர் விழியில்
சற்றுநேரமே தெரிந்து மறையும் சித்திரம் அது