Thursday, January 3, 2013

கைத்தொலைபேசிக்காரன்

திடீரென்ற ஓர் அழைப்பொலியைக் கேட்டாலும்
பதறாமல் அதற்குப் பழக்கப்பட்டவர்போன்ற
நிதானத்துடன் சிறிது தாமதமுமின்றி
சூழலை விட்டும் விலகியவராய் ஒதுங்கி
எங்கோ தூரத்திலுள்ள ஒரு குரலோடு
அவர் தொடர்பு கொள்கிறார்
அவ்வேளை அருகிலுள்ளவர்களெல்லோருமே
அவரால் கைவிடப்பட்டவர்கள் போலாகிறார்கள்
அவர் பேசி முடித்துவிட்டுத் திரும்புகையிலும்
அவர்கள் முகத்தில் அச்சோகம் ததும்புகிறது

அவர் யாரோடு பேசினார், என்ன பேசினார்
என்பதல்ல முக்கியம்
அவர் யாராயிருந்தாலும் அந்த யாரோ ஒருவர்
அவர்களுக்கு அந்நியராகவே ஆகிவிடுகிறார்
முகந்தெரியாத அந்த நபரின்
குரலுக்குச் செவிசாய்த்து நிற்கும் இவர் முகத்தில்
அவ்வப்போது துவக்கத்தில் சற்றே நெருடினாலும்
உடனே சரியாகப் பற்றிக்கொள்ளும்
அன்னியோன்யம், கவனம், அக்கறை...
அப்போது வசீகரமிக்க ஒரு காதலராய் அவர் காட்சியளிக்கிறார்
சுற்றியுள்ளவர்களிடமெல்லாம் பித்தேறுகிறது பிரேமை அவர்மீது
அவரால் உரையாட முடிகிற
முகம் தெரியாத அந்த யாரோ ஒருவர்மீது அந்நியமும்
பொறாமையும் இவரால் கைவிடப்பட்டது போன்ற
அந்த சோகமும் துடைக்கப்படாமலேயே
அந்த பிரேமை கனல்கிறது

அந்தக் கருவியை இடுப்பில் செருகி அமர்த்திவிட்டு
அவர் புன்னகையுடன் அவர்களை நோக்குகிறார்
அவர்களைப் படித்துவிடுகிறார்
அந்த யாரோ ஒருவர்தான் நீங்கள் ஒவ்வொருவருமே என்கிறார்
அவர்களுக்கு அது புரிகிறதில்லை
எல்லாம் பிதற்றல்களாகத் தெரிகின்றன

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP