அவன் வீடு
கற்பாறைகளின்மேல் கட்டிய புத்திசாலியல்ல அவன்
எல்லாத் திசைகளும் சந்திக்கும் ஒரு நாற்சந்தியின்
பள்ளத்து மூலையில் உள்ளது அவன் வீடு
மழை பெய்தால் கடல் சூழும் தீவு அது
ஒவ்வொரு மனைமீதும் பொழிந்து கழுவி
ஓடிவரும் வெள்ளம் அதைச் சூழும்
ஒரு மடையனைப் பார்ப்பதுபோல்
அவனையும் அவ்வீட்டையும் பார்த்துப் போவர்
தவறிப்போய் அவ்வழி வந்தவர்கள்.
வெள்ளம் புகுந்த வீட்டின் மொட்டைமாடியில் நின்றபடி
அவன் பார்ப்பான் அவர்களை.
அவர்களுக்கு தன் மனையின் ஒரு கதவைத் திறந்து
மறுகதவு வழியாய் அவ்வெள்ளம் கடக்க உதவுவான் அவன்
அப்புறம் அவர்கள் அப்பக்கம் வரமாட்டார்கள்
வரவேண்டி நேர்ந்தாலோ கண்டிப்பாய் அவன் உதவுவான்
அவன் இருப்பான் அசையாமல்
கடல் சூழ்ந்த தீவில்
அவர்களைச் சிந்தித்தபடி
அவ்வெள்ளம் சற்று வற்றும்
அப்புறம் வீட்டைச் சுற்றித் தேங்கியிருக்கும் நீர்
சாக்கடையாகியிருக்கும்
அவன் மட்டுமே அதை
அகற்றுவதற்கு நேர்ந்தவனாய்த் துடிதுடிப்பான்
அத்துடிப்பில் மகிழ்கிறானோ இரகசியமாய்?
ஒரு மடையனாய்
பள்ளத்தில் வீடுகட்டிப்
படாத பாடுபட்டும் உள்ளுக்குள் மகிழும் பைத்தியமோ அவன்?