நம்ம அருணாவைப் பார்த்தீர்களா
நம்ம அருணாவைப் பார்த்தீர்களா
வெகுளி மகிழ்ச்சி கொண்டு
விழிவீசிச் சுட்டினாள் என் மனைவி
பத்தாயிரம் ரூபாய் பட்டுப் புடவையின்மேல்
நாற்பது பவுன் நகை பாரம் கழுத்தை இழுக்க
தூக்கிய தலையோடு
ஒவ்வொரு விழாச் சந்தர்ப்பங்களிலும்
ஒரேமாதிரிதான் காட்சியளிக்கிறாள் அருணா
நர்சரிப் பள்ளி போவதற்குமுன்
அவள் எப்படி இருந்தாள் என்பது
அவளுக்குத் தெரியுமோ தெரியாதோ
படிப்பில்தான் எத்தனை வேகம் காட்டினாள்!
அரசுத் தேர்வுகளிலும் அரசு வேலைத் தேர்வுக்கும்
போட்டி போட்டுப் படித்தாளே அவள்!
வெற்றிவாகை சூடிய கையோடு
மணாளன் ஒருவனையும்
படக்கென்று கைப்பிடித்தாள்
அந்த பத்தாயிரம் ரூபாய் பட்டுப்புடவையின்மேல்
நாற்பது பவுன் நகை பாரம் கழுத்தை இழுக்க
தூக்கிய தலையிலே கூடுதலாய்
அசுவமேத யாகம் செய்யப் போகிற ஒரு
சக்கரவர்த்தினிப் புன்னகையோடு
ஒவ்வொரு விழாச் சந்தர்ப்பத்திலும்
ஒரேமாதிரிதான் காட்சியளிக்கிறாள் அருணா
நம்ம அருணாவைப் பார்த்தீர்களா
நான் கவனிக்கவில்லையோ என நினைத்து
மீண்டும் உசாவினாள் என் மனைவி.
”பார்த்தேன், பார்த்தேன்.”