நாற்காலியும் நட்சத்திர மண்டலமும்
மனதைப் பறி கொடுத்தல்லவோ
(உட்கார்ந்தபடியே எழுதவும் சாப்பிடவும் தோதான)
இந்த அழகிய நாற்காலியை வாங்கினேன்
(சட்டென்று எழுந்து வெளியேற முடியாதபடி
மேஜைபோல் ஓர் பலகைத் தடுப்பு உண்டு அதற்கு)
நான் சற்று எழுந்து நகர்ந்தாலும் போதும்
என் குடும்பம் பதறுகிறது
அறைக்குள்ளே எழுந்து நடந்தால்
அமைதியிழந்தேனோ என எண்ணி
என்ன என்ன என்று ஆளாளுக்குக் கேட்கிறார்கள்
அறையைவிட்டு நான் வெளியே கிளம்பினால்
வேறுவேறு தட்பவெப்பம் மற்றும் பண்பாட்டுக்
கவனம் குறித்து அவர்கள் படும் கவலைகள்
சொல்லி முடியாது
என் நாற்காலியில் அமர்ந்தபடி
நட்சத்ர மண்டலங்களைப் பார்த்தபடி இருக்கிறேன்
அப்போதும் அவர்கள் அஞ்சுவது தெரிகிறது
நான் இந்த நாற்காலியில்
எப்படி அமர்ந்திருக்க விரும்புகிறார்கள் அவர்கள்?
மனதைப் பறிகொடுத்தல்லவோ
நான் இந்த நாற்காலியை வாங்கினேன்