சிற்பி
அவன் அந்தக் கல்லைத் தூக்கிக் கொண்டுவந்து
திம்மென்று தரையில் வைத்தபோது
அந்தக் கல்லுக்கு அது தெரியாது
ஏனென்றால் அது ஒரு கல்
அவன் அதன்மீது உத்தேசித்த ஒரு வடிவத்தைத்
தீட்டியதையும் அது அறியாது
ஏனென்றால் அது ஒரு கல்
அப்புறம் ஒரு பெரிய உளியையும்
சம்மட்டிநிகர் சுத்தியையும் கொண்டு
உத்தேசித்த வடிவம் நீங்கலான பகுதிகளையெல்லாம்
முரட்டுத்தனமாய் மோதிக் கடாசியதையும்
அது அறியாது
ஏனென்றால் அது ஒரு கல்
உத்தேசித்த உருவத்தின் காந்தி
உள்ளே சிலிர்க்கச் சிலிர்க்க
சிற்றுளியும் சுத்தியலும் கொண்டு
செதுக்கிக் கொண்டிருக்கிறான் சிற்பி வெகுநுட்பமாய்
இப்போது அது ஒரு சிலை
கல்லிலிருந்து திமிறித்
தன்னைத் தானே விடுவித்துக் கொண்டிருக்கும் சிலை
இப்போது அது ஒரு சிலை
இறுதி வேலையான கண்திறப்பு ஒன்றுக்குக்
காத்திருக்கும் சிலை
இப்போது சிலைக்குக் கண்திறப்பு நடக்கிறது
கண் திறந்ததும்
சிற்பக் கூடமெங்கும் ஒரு புத்தொளி
அங்கே சிற்பியைக் கண்ட சிலைக்கு
எச்சலனத்தையும் இயற்றவொண்ணாத் திகைப்பு
பார்த்தவிழி பார்த்தபடியே நிற்க
அதனிடம் நிலைகொண்டது
முடிவற்ற தியானம்