அந்தப் பறவை
உன்னைத்தானோ நான் தேடிக்கொண்டிருந்தது?
கறுப்புக் கொண்டையாய் ஒரு கிரீடம்
கழுத்தில் சிவப்பு வண்ண ஆரம்.
எதிர்பாராத இன்பச் செய்தியாய்
பசலைக் கொடிப் பந்தலின்கீழ்
திடும்மென்று வந்துதித்து நின்றாய்
என் பொறுமையை நீ அறிவாய்
என் துயரை நீ அறிவாய்
இன்று என் குதூகலத்தையும் நீ அறிவாய்தானே?
வெகு கவனமான பரிசீலனைக்குப் பின்தான்
உன் கூட்டினை என்னிடம் அமைக்க
முடிவு செய்வாயெனத் தெரியுமெனக்கு
அன்று நீ என் எலுமிச்சை மரத்தில் கூடு கட்டியதில்
எத்தனை ஆனந்தம் எனக்கு
எத்தகைய பேற்றை நான் பெற்றேன்.
நீ பிறப்பித்த ஜீவன்களை என் கவனத்தை மீறி
என் அண்டைச் சிறார்கள் சீண்டிவிட்டதால்
விட்டோடி விட்டாய் ஒரே போக்காய்
என் நெடுந்துயரை நீ அறிவாய் – இன்றேல்
மீண்டுமொரு வாய்ப்பளிக்க வந்திருப்பாயா இன்று?
நான் நன்கு அறிவேன் உன் இதயத்தில்
எனக்குள்ள இடத்தைப் பற்றி.
நீ உன் இன்பியிடம் எடுத்துச் சொல்வாய்,
அழைத்துவருவாய் அவளை.
அதே எலுமிச்சை மரம் காத்திருக்கிறது உங்களுக்கு
பப்பாளிக் குலைகளும் ஒவ்வொன்றாய்க்
கனிந்துகொண்டிருக்கின்றன
அண்டைச் சிறுமனிதர்கள்
அவர்கள் காலில் விழுந்து கேட்டுக் கொண்டாவது
கவனித்துக் கொள்கிறேன்
இம்முறை உங்களை இழக்கத் தயாரில்லை நான்.
வாருங்கள் உங்கள் குரல் அமிர்தம்
இந்தத் தோட்டத்தில் சிந்தட்டும்.
பாழ்பட்டுக் கிடக்கும் இந்நிலம்
உய்யட்டும் நும் வரவால்