கொதித்து ஆறிய நீர்
தண்ணீரை எனக்கு ரொம்பப் பிடிக்கும்
தண்ணீர் குறித்து இவ்வாறு பேசுவது உளறல்
எனினும் உளராமல் இருக்க முடியவில்லை
பிடிக்கும் என்றாலும்
ஐஸ்வாட்டரைத் தொடமாட்டேன்
(காரணம் உங்களுக்குத் தெரியாததல்ல)
தாயைக் கழித்தாலும் தண்ணீரைக் கழிக்காதே
என்றொரு பழமொழியுண்டு. இக்காலமோ
நீர்பற்றி எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய காலம்
மண்ணில் விழுந்த நீரைக் கைகளால் அள்ளுவதோ
காலால் அலம்பிக் குதித்து விளையாடுவதோ கூடாது இப்போது
மலைவனப் பிரதேசங்கள் இதற்கு விதிவிலக்கு எனினும்
அங்கும் பாறைகளில் குதித்து ஆடும் நீரையே
ரொம்பவும் பிடிக்கிறது
வானிற்கும் பூமிக்குமிடையே
அது மழைத்துக்கொண்டிருக்கும் கோலத்துக்கு அடுத்தபடி
இரைந்துகொண்டோ அழுதுகொண்டோ
குடத்தில் விழும் குழாய்நீர் –
அதை நாம் நம்புவதில்லை.
நீரையே நம்பாத ஒரு நோய்க்காலம்தான்
வந்துவிட்டதே நமக்கு. எள்றாலும்
தண்ணீரை எனக்கு ரொம்பப் பிடிக்கவே செய்கிறது
டாக்டர்,
உங்கள் அறிவுரையின்படி கொதித்து ஆறிய நீர்
அந்த அருவி நீருக்கு அடுத்தபடி