தொலைபேசி
எனக்கு என்றதும் தான் என்ன சந்தோஷம்
எங்கிருந்து
யாரென்னை அழைக்கிறார்கள்
என்ன சேதி
எல்லாம் அறிந்ததுபோல்
என்ன சந்தோஷம்
(அழைப்பொலி கேட்கையிலெல்லாம்
அஞ்சியதுண்டு ஒரு காலம்)
பேனாவும் தாளும் எடுத்துப்
பிடித்துவைத்துக் கொள்ளவில்லையெனில்
அடித்துச் செல்லப்பட்டுவிடுமோ தகவல்கள்
கண்காணாத அந்த வெள்ளத்தில்?
காதருகே ஒலிக்கிறது
நான் அறிந்திராத உலகத்திலிருந்து அந்தக் குரல்
என் பதில் எதையும் எதிர்பாராத அந்தக் குரல்
என்னைப் பித்துப் பிடிக்கவைக்கும் அந்தக் குரல்
தானே துண்டித்துக்கொள்ளும் அந்தக் குரல்
இன்னும் என் இதழருகே நிற்குமுனக்கு
என்னதான் தாகம்?
பேச்செழாது நிற்கிறது
உன்னருகே என் இதழ்