கருணை கொண்டு
...நான் வழங்குவதாக எண்ணிக்கொண்டிருந்தேன்.
அதைத் தேடி
என் கதவை உலுக்கும் சிறார்களாய்
நீ வந்துகொண்டிருந்திருக்கிறாய்.
அன்று எப்படி நான் உடைந்துபோனேன்!
என் ஓய்வுக்கு இடைஞ்சல் பண்ணுவதாக வெடித்து
உன் கல்லெறிக்குக் கோபித்து
ஒரேயடியாய் உன்னை விரட்டிவிட்டேன்
உன் ஏமாற்ற முகம் மட்டும் விலகாமல் தகிக்கிறது
உன் வரவின் இரசியத்தை அறிந்து என் மனம் துடிக்கிறது
என் துடிப்பை அறிந்து
திரும்பவும் திரும்பவும் நீ வருவாய் என
உன் தனிப் பெருங்கருணையை எதிர்பார்த்து எதிர்பார்த்து
வளர்ந்த வேதனையே நானாகி நிற்கிறேன்
மாலையில் தொழிற்சாலைகளிலிருந்து
வீடு செல்லும் தொழிலாளிப் பெண்களும்
குழந்தைகளும் வழிப்போக்கர்களும் வருகிறார்கள்
உன்னை எதிர்நோக்கியபடியே அவர்களுக்கும் வழங்கிக்
கொண்டிருந்தேன்.
நீ வந்தாயோ நான் இல்லாதபோது?
மத்யான ஓய்வின் தொந்தரவு பொறுக்காத என் மனைவி
உன்னை விரட்டியதில் கோபங் கொண்டு
என் மதிற்சுவர் ஒட்டி வளரும்
அலங்காரச் செடிகளையெல்லாம் பிடுங்கித்
தூர எறிந்து
சென்றிருக்கிறாய்