அந்தச் சுவர்க் கடிகாரம்
எப்போதையும்விடத் தீவிரமாய் இப்போது
பொன்மணி போலொரு பொருளை விரும்பினேன்
காலம் இற்றுவிழப் படுக்கையில் விழுந்த என் எதிரே
அதைக் காணவே கண்டு துடிதுடித்தேன்
நண்பனை அழைத்து ஒரு சுவர்க் கடிகாரம்
வாங்கிவரச் செய்து மாட்டினேன் எதிரே.
அய்யோ, அதன் அழகு சொல்லி மாளாது.
அநத் அழகும் வியப்பும் ஒரு வினாடியும் மறையாது.
ஒவ்வொரு வினாடியும்
தன்னைத்தானே புதுக்கிக்கொண்டிருக்கும்
பொன்மணி போலொரு பொருள் அதை –
ஆ, எப்படிச் சொல்வேன் அதன் அழகை!
அதை நான் தேர்ந்தெடுக்கவில்லை;
ஆகவே அது மிக அழகாயிருந்தது.
ஆனாலும் அதன் பொன்மணி வண்ணத்திற்காய்
குறிப்புக் கொடுத்திருந்தேன்.
ஆகவே அது மிகமிக அழகாயிருந்தது.
எவ்வேளையும் என் எதிரே இருந்தபடி
மாறா அழகாய் உயிர்த்துக்கொண்டிருந்தது அது
தூக்கம் விழித்து எழுந்த என் தியானத்திற்குப்
பக்கவாத்தியமாய்
பின்னணி இசையாய்
இல்லை
என்னை அளக்க முயலும் அளவையோ அது?
இல்லை
சாட்சியாய்
ஒரே துணையாய்
தியான மந்திரமாய்
இல்லை
தியானமாகவே
இருந்தது அது