கல்லும் கடவுளும்
எனக்குள்ளே என்ன பெருமுயற்சி முரண்டிக்கொண்டிருக்கிறது
இனம்புரியாத இந்தத் துக்கத்திற்கும் வாதனைக்கும் காரணமாய்?
அதைக் காணத்தான் என்பதுபோல் எழுந்து
நடந்துகொண்டிருந்தேன்
எனக்குள்ளே நான் நடப்பதுபோல் அந்த வீதியில்.
என் கால்கள் நின்றன அந்த இடத்தில்.
அந்த இடத்தைப் பண்படுத்தி
ஒரு கல்லைக் குளிப்பாட்டி ஆடை கட்டி
அங்கே நட்டிக் கொண்டிருந்தான் ஒருவன்
அந்தக் கல்லைக் கெஞ்சியும் கொஞ்சியும் மன்றாடுவதுபோல்
இயங்கிக் கொண்டிருந்தன அவன் விரல்கள்