புதிய குழந்தை
அனுப்புவோனோ
தூதுவனோ இல்லாத
அற்புதச் செய்தி நீ.
இதயத்தை
ஒரு பரிசுப் பொட்டலமாய்ச் சமர்ப்பிக்கவோ
ஓடோடியும் வந்தேன் நான் உன்னைக் காண?
எங்கிருந்து வருகிறோம்
ஏன் எதற்காக என்பதையே அறியாத
சின்னஞ் சிறு ஜீவனே,
எத்தனை கோடி ஆண்டுகள்
கடல் தன் கர்ப்பத்துள் வைத்துன்னைத் தாலாட்டியது
எத்தனை நட்சத்திரங்கள் எத்தனை காலங்கள்
கண்கொட்டாமல் உன் வருகையை
எதிர்பார்த்திருந்தன?
இன்று நாங்கள் உன்னைக் காண்கிறோமா?
புத்தம் புதிய விருந்தாளியே
இன்று உன் வருகைமுன்
நாங்கள் கூசிக் குறுகி நிற்கிறதேன்?
எங்கள் மூளை பதிவுகளால் நிறைந்தது.
பாதுகாப்பு பயம் அதன் அடித்தளம்.
அதன் விபரீத உச்ச விளைவு எங்கள் போர் ஆயுதங்கள்
எத்தகைய குரூரங்களினால் காய்ந்து உறைந்தவை
எங்கள் கைகள்?
எவ்வளவு மென்மை எவ்வளவு உறுதி
எவ்வளவு பரிசுத்தம் உன்னில்
உன் வருகையைப் பதிவு செய்யும்
அரசு அறிவதென்ன?
உனக்குத் தயாராய் நாங்கள் வைத்திருக்கும்
வாழ்க்கை என்ன?
எங்கள் மகிழ்ச்சியின் தூய்மை/தூய்மையின்மை குறித்து
நீ என்ன எண்ணுகிறாய்?
எண்ணவே மாட்டாய்.
மாபெரும் கருணையினதும் மன்னிப்பினதுமான
செய்தியன்றோ நீ.
எங்கள் ஆசைகளையும் கனவுகளையும்
அச்சங்களையும் பெருமைகளையும்
பரிசீலிக்காமலேயே நாங்கள் உனக்குச் சூட்டுகிறோமோ?
நாங்கள் உன்னைச் சிக்கவைத்த
ஆபத்துகளினின்றும்
மரணத்தின் மூலம் தப்பித்தே
இன்று வந்துள்ளாயோ?
உன் முகத்தில் எங்களின் சாயல் கண்டு எழும்
எங்கள் குதூகலத்தின் பொருள்?
இச் சாயல்கள் மூலம் நீ உணர்த்தும் குறிப்பு?