தீவின் அகம்
தளக்கல் பதிக்கப்பட்ட இந்த மொட்டைமாடி
விநோதமான ஒரு தீவு
விசித்திரமான பாலை
பாழ் தகிக்கும் பாறை
சுற்றிலும் திடீரென்று
நான் அப்போதுதான் கண்ணுற்ற வெள்ளம்,
விண்ணோடு கொஞ்சும்
ஒரு பள்ளத்தாக்குக் கடல் அமிர்தம்,
மரணக் கைப்பிடிச் சுவர்,
வேகுந் துயர் கண்டோ காணாதோ
பூமி மடியிலிருந்து பொங்கித்
தாவி அணையும் ஒரு படிக்கட்டு
செல்லப் பிராணி ஒன்றின் மிருகப் பரவசம்
நான் மரித்தேன் அக்காதல் முன்னால்
அடைந்தேன் பள்ளத்தாக்கின் குளிர்மடியை
அழைத்துச் செல்லப்பட்டேன்
கதவு திறந்து
விநோதமான அத்தீவின் அகத்திற்குள்
கடல் அமிர்தத்தின் கருவறைக்குள்
பெருவளைக்குள்
ஒளிக்குகைக்குள்