Friday, January 11, 2013

லேடீஸ் அன்ட் ஜென்டில்மென்

இதோ உங்கள் கனவு நனவாகிறது
உங்கள் அடிமனத்தின் ஆவலை நிறைவேற்றும்
அந்தப் பிரதேசம் உருவாகிவிட்டது ஓடோடி வந்து நீங்கள்
பிரஜையாகிக் கொள்ளவேண்டியதுதான் பாக்கி
(எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளதால்
உங்கள் இடத்திற்கு இப்போதே முந்திக் கொள்ளுங்கள்)
சுற்றி ஐம்பது கிலோமீட்டர் தொலைவிற்கு
மாசு உண்டாக்கும் எவ்வித ஆலைகளும்
எக்காலத்திற்கும்
உருவாகாதபடித் திட்டமிடப்பட்டுள்ளது
(எங்கள் தொலைநோக்குப் பார்வைக்கு
மிகப் பெரிய சாட்சியம் இது)

பிரதேசத்தின் ஒவ்வொரு இடுக்கின் தூய்மையும் அழகும்
நல விஞ்ஞானிகள் மற்றும் கட்டடக் கலை வல்லுநர்களால்
ஒவ்வொரு கணமும் கண்காணிக்கப்படுகின்றன.
மீத்தேனை வெளியேற்றாத புதுவகைச் சாதனங்களால்
எல்லா இல்லங்களும் ஏ சி செய்யப்பட்டுள்ளன.
பிரஜைகள் பேட்டரியால் இயங்கும் கார் மட்டுமே
வைத்திருக்க அனுமதியுண்டு.
உங்கள் பொன்னுடலுக்கேற்ற தட்பவெப்பநிலையை
கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் வான்மிதவைக் கலங்கள்
(உலகிலேயே முதன்முதலாய் அறிமுகப்படுத்தப்படுகிறது இங்கேதான்)
உங்கள் மனதைத் தொல்லைப்படுத்தும்
ஏழை எளியவர் எவருமே கிடையாது
எல்லாப் பணிகளுமே கணினிப்படுத்தப்பட்ட
கருவிகள் மூலமே செய்யப்படுகின்றன
நல்லூதியம் பெறும் விஞ்ஞானிகள் மற்றும் இன்ஜினீயர்கள்
இலவச சேவைக்காய் எப்போதும் தயார்நிலையில்.
உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான பூங்காக்கள்.
ஆனால் அங்கே
நறுமணமூட்டப்பெற்ற தென்றல் காற்று எமது புதுமைப் படைப்பு
(ஒவ்வாமைக் கவனத்துடன் வடிவமைக்கப்பட்டது)
மற்றும் மினரல் வாட்டர் டேங்க்.
பிரதேசத்தைச் சுற்றி வானுயர்ந்த சுற்றுமதில்போல்
பிரதேசத்திற்குள் நுழையும் காற்றை வடிகட்டித்
தூய்மைப்படுத்தும் மாபெரும்
’மேக்யரோபியூர்’ சல்லடை இயந்திரம்.
(நமது பிரதேசத்தில்தான் முதன்முதலாய் அமலுக்கு வந்திருக்கும்
விஞ்ஞானச் சாதனை எண் – 2)

அதிநவீன மனிதர்களான உங்களுக்காக உருவாக்கப்ட்ட
இந்த அதிநவீனப் பிரதேசத்தின்
அதிநவீனப் பாதுகாப்புப்படை
எங்களது சிகரப் படைப்பாகும்

மேலும் எமது சகோதர நிறுவனத்தின்
’காண்டவ வனத்’திற்கு
(எல்லாவித வேடிக்கை விநோத கேளிக்கைகளும்
உங்களுக்காகவே ஒருங்கமைக்கப்பட்ட
விடுமுறை நாள் சொர்க்கம். ஆசியாவின்
நம்பர் ஒன் வாட்டர் தீம் பார்க்)
இங்கிருந்தே செல்ல சுரங்கப் பாதையுண்டு
(பிரதேசவாசிகளுக்கு மட்டும் இலவச அனுமதி)

காண்டவ வனத்தின், விரைவில் துவங்க இருக்கும்
விரிவாக்கத் திட்டத்தின்கீழ்
நீங்கள் கனவுகூடக் கண்டிராத வியத்தகு
கலை இலக்கிய நுகர்வுக் களஞ்சியங்கள்:
மயிலாப்பூர் வனத்தில் திருவள்ளுவர் உலவுவார்.
ஒரு பொத்தானைத் தட்டிக்கேட்டால்
1330 குறளையும் அப்படியே ஒப்பிப்பார்.
கம்பனையும், ஷேக்ஸ்பியரையும், தாந்தேயையும்
அப்படியே உலவவிட்டுள்ளோம்.
இன்னும் மகா காவியங்களின் மகத்தான
கதாபாத்திரங்களுடன் (ஸ்ரீராமன் முதல் அன்னா வரை)
நீங்கள் இஷ்டப்பட்டவர்களுடன் இஷ்டப்பட்ட நேரத்தில்
உரையாடி மகிழலாம்.
ஒரு பொத்தான் உதவியுடன்
ஊர்வசியும் ரம்பையும் உங்கள் மடியில் விழ
நீங்கள் கொஞ்சலாம்.
சில இடங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியது
சில இடங்கள் பெண்களுக்கு
சில இடங்கள் குழந்தைகளுக்கு
குழந்தைகள் இலக்கியத்தின் முக்கிய பாத்திரங்கள் எல்லோருடனும்
இனி குழந்தைகள் நேரிலேயே பழகலாம்
இனி கலைஞர்களே தேவையில்லை
கலையை நுகர்பவர்களே தேவை

இன்னும்
எல்லாவற்றையும் அறிய ஆள அனுபவிக்க
உங்கள் கனவுலகின் நனவுலகப் பிரஜையாக
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம்
கீழ்க்கண்ட பாரத்தைப் பூர்த்தி செய்து
உடனே நீங்கள் எங்களைத் தொடர்புகொள்ள
வேண்டிய முகவரி...
இன்டர்நெட்டிலும் எங்களை நீங்கள் அடையலாம்
எங்கள் இ மெயில் விலாசம்...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP