இருளோடு
...நாம் செய்துகொண்ட சமரசம் சரிதானா?
கூடுதல் பகல் வேண்டி
பரிதியைப் பிரதிபலிக்கும் இந்த நிலவோடும்
மின்விளக்குகளோடும்
முயற்சிகள்தாம் எவ்வளவு?
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
வீழ்த்தத் தவறுவதில்லை இரவு
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும் என்று
நாளின் பகுதியாகவே ஆகிவிட்டது இரவு
கூட்டுக்குள்ளிருக்கையில் இந்த இரவு
சீக்கிரமே வந்துவிடுகிறது
கூட்டின்மேல் வந்திருக்கையில்
கூடுதல் பொழுது கிடைக்கிறது
ஓய்ந்து அமர்ந்திருக்கிறது இதோ
வானத்தைச் சிறகால் அளக்க முயன்ற என் பறவை
அதற்குத் தெரிகிறது
”அங்கே போய்விட்டால்
இரவென்பதே இருப்பதில்லை”