இனி ஒருக்காலும்...
இப்பூமியிலேயே மிக அழகானதோர்
காட்சியை நான் கண்டுவிட்டேன்
இனி ஒருக்காலும் அக்காட்சியை விட்டென்
விழிகள் அகலாது
வழி தவறியவன் போலவோ
வண்டி தவறவிட்டவன் போலவோ
இனி ஒருக்காலும் என் விழிகள் முழிக்காது
இனி ஒருக்காலும் என் கால்கள் பிறிதோரிடம்
தேடி அலையாது
இனி ஒருக்காலும் பதற்றத்தினால்
என் நெஞ்சம் துடிக்காது
இனி ஒருக்காலும் ஆசைகளை
என் தோள்கள் சுமக்காது
இனி ஒருக்காலும் துயரங்களால்
என் நடை தளராது
இனி ஒருக்காலும் நால்வர் தோள்களிலே
என் கைகள்தன் கூட்டைக் கட்டாது
இனி ஒருக்காலும் மனிதர் முதுகின்மேல்
என் மேடை அமையாது
இப்பூமியின் மேல் தன்னந் தனியாய்
மனிதன் ஒருவன் நடந்து செல்லும் காட்சியை
நான் கண்டுவிட்டேன்
அவன் கால்களின் இயக்கத்தையும்
விழிகளையும் நான் பார்த்துவிட்டேன்
அவன் நின்றால்
எத்தகைய பாடலில் பூமியும் சிரித்தது
அவனை நான் மிக அண்மையில்
பார்த்துவிட்டேன் பேசிவிட்டேன்
என்று எங்கிருந்து தன் பயணம் தொடங்குகிறது
என்று எங்கு போய் அது முடிகிறது
கேள்வியும் அறியான் விடையும் அறியான்
மரணத்தைவிடத் தான் மேலானவன் என்றது
அவனது காம்பீர்யம்
எனினும் மரணமே அவன் குரலின்
கனிவின் காரணம்.
அவன் கொந்தளிப்பின் ரகசியமும்
அன்பெனத் தென்பட்டது,
தொலை தூரத்து அழைப்பொலியாய்
அவன் குரலில் கனன்றது நாதம்
இப்பூமியிலேயே மிக அழகானதோர் காட்சியை
நான் கண்டுவிட்டேன்
இப் பூமியின் மேல் தன்னந்தனியாய்
மனிதன் ஒருவன் நடந்துசெல்லும் காட்சியை