காணிநிலம் கேட்டேன்
காணிநிலம் கேட்டேன்
ககனம் முழுதும் தந்தாய்!
உன்னைப்போல் இன்னொருவன் கேட்டதற்கு
ஒரு கோடி வித்துக்கள் பொழிந்தாய்!
காதல் மிகக்கொண்டு
என் அருகிலேயே இரு என்றேன்
எங்கும் நீ நிறைந்தாய்!
இன்பத்தால் என் நெஞ்சம் வெடித்துவிடாதபடி
அவ்வப்போது சிறு சிறு இடர்களையும் கொடுத்தாய்
என்னைப் புதிய உயிராக்க
என்னுள்ளே இருந்து கொண்டு
என்னென்ன வினைகளினைச் செய்துவந்திருக்கிறாய்!
என் காயங்களை நீ குணமாக்கப் படுக்கவைத்தால்
நோய் என்று அதனை நான் இகழ மாட்டேன்
என்னை நீ தூங்க வைத்தால்
இனி மரணம் என அதை நான் சொல்ல மாட்டேன்
கரும்பலகையில் நீ அழித்தழித்து எழுதும் எழுத்துக்களுக்காய்
இனி ஒருக்காலும் பதறமாட்டேன்
உன் கழுத்தைக் கட்டிக்கொண்டு
உன்னிடம் தொங்குவேன் நான் பெரிய தொந்தரவாக.
சொல், என்னைவிட மதிப்புமிக்க ஆபரணம்
வேறு உண்டோ உனக்கு?
சொல், சொல்லும்வரை விடமாட்டேன் நான்