அறைக்குள் நுழைகையில்
அறைக்குள் நுழைகையில்
’அது’ அங்கே அமர்ந்திருந்ததைப் பார்த்துவிட்டேன்,
எந்தவித அலங்காரமுமில்லாமல்
மனம் கொள்ளாஅழகுடன்
மணமகனை எதிர்நோக்கி இருக்கும்
முதலிரவுப் பெண்போல
என் ஆர்வத்தைத் தூண்டியபடி
’அதன்’ கைமட்டும் நீண்டுவந்து கதவைத் தாழிட்டது.
யாருக்கும் கேட்காத ஓர் ஒலியுடன்
’அது’ ஏதும் பேசவில்லை.
சொல்லொணா இரகசியத்தைச் சொல்லும் மவுனம்.
’அதன்’ விழிகளும் அறை நிறைந்த ’அதன்’ ஆகிருதியும்தான்
பேசின பேசின பேசின முடிவற்று
நான் களைத்துப் போகும்வரை; பிறகு தூக்கம்
விடிகாலையில் ’அதனை’க் காணோம்.
மற்றுமொரு மாயாஜாலமாயிருந்தது
வெளியிலிருந்து ’அது’ கைவளைகள் குலுங்கக்
கதவைத் தட்டியது