சொற்கள்
பேசி முடித்த ஒவ்வொரு வேளையிலும்
புதிரானதொரு துக்கம் அழுத்துகிறது
என் சொற்களே
தன் நோக்கத்திற் கெதிராய்ச்
செயல்பட்டுவிட்ட மாதிரி
முதன் முதலில் தோன்றிய சொல்
’நான்’ ஆக இருந்தது
அதை அழிக்க எனத் தோன்றின
ஆயிரம் சொற்கள்
தோன்றிக்கொண்டே இருந்தன
சொற்களின் ரணகளக் கூச்சல்
அனைத்தும் அழிந்தன ஒருபோது
ஒலியிலாச் சொல்லொன்று
ஒளிர்ந்தபோது
ஆனந்தமானது அவ்வேளை
நல்லவேளை
என் பேச்சை அவிழ்த்துவிடும்
நபர் யாரும் இல்லை
பறவைகளின் ஒலிகளில் சொற்களில்லை
பரிதியின் பொன்னில் சொற்களில்லை
அந்தக் காலைக் குளிர்விரலில் சொற்களில்லை
மரங்களின் அசையும் பச்சை நாவுகளில்
மேகங்களின் ஒளிரும் மெல்லிய நகர்வில்
சொற்களில்லை ஆனால்
இருந்தது ஓர் உரையாடலின் கனி
கட்டித் தழுவி முத்தமிட்டோ
காலில் விழுந்தோ
நான் உன்னைக் காட்டிக் கொடுத்துவிடுகிறேன்
நீ ஒவ்வொரு முறையும் சிலுவையிலேறி
ஒவ்வொரு முறையும் உயிர்த்தெழுகிறாய்