Sunday, January 27, 2013

ஒவ்வொரு கோடை மாலையும்

ஒவ்வொரு கோடை மாலையும்
எங்கள் மொட்டைமாடியை மாற்றுகிறது
அவசரமானதோர் வாசஸ்தலமாய்
காட்டுவெளியில் கட்டிய ஒரு கூடாரமாய்
மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலின் மேல்தளமாய்

பாதாள உலகமாய் ஆகிறது வீடு
எனினும் அங்கேதான் போயாகணும்
நாங்கள் சேகரித்த சவுகரியங்கள் அனைத்தும்
அங்கேதான் என்பதால். மற்றும்
பாம்பு தீண்டி மரித்த காதலியை மீட்கவும்

இந்தக் கப்பல் மூழ்கிவிடும்
நெருங்கிவிட்டது பனிப்பாறை
நட்சத்ர வானை இழந்த பாதாள உலகுக்குள்தான்
நாங்கள் இனிமேல் வாழப் பழக வேண்டும்,
பிரதிபலிக்கும் நட்சத்ரங்களுடனும்
அலைமோதும் சந்திர சூர்யர்களோடும்
ஆர்பியஸின் பாடலோடும்
தேவதைகளின் மின்விசிறிச் சிறகுகளினடியில்

கடலின் பாதாளத்திற்குள்ளும் கோடையுண்டு
மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலின் மேல்தளம் போன்ற
மொட்டைமாடியுண்டு

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP