இயற்கை
அன்று கண்விழித்தபோது
எதிரே நின்றிருந்தது அது
இயற்கை
எவ்வளவு எளிய ஒரு சொல்
கடவுள் இல்லாத ஓர் ஆலயம்
இல்லாத கடவுள்
நான் அணிந்திராத மணிமுடியை
வீசி நொறுக்கிய சிதறல்
எண்ணற்ற வயதின் எண்ணற்ற சாதனைகளின்
வெற்றிப் பதக்கங்கள் சிதறிக் கிடக்கும் கோலம்
அதன் மேல் ஓர் ஒளிமூட்டம் போல்
சொல்லொணாததோர் அமைதி அடக்கம்
நெகிழ்ச்சி தாழ்மை மென்மை
எதாலும் ஊடுருவ முடியாததாய்
எதையும் ஊடுருவக் கூடியதாய்
அதன் உறுதி
என் கண்கள் மூடிய பிறகும்
இருக்கும் அக்காட்சி
அதைக் கண்டவர் எவருமில்லையோ?
என்ன செய்வதென்றறியாது
எத்தனை சிலைகளைப் படைத்து
எத்தனை மலர்களைக் கிள்ளி இறைத்துவிட்டோம்
ஒரு மலராவது அந்த அர்ச்சனையின்போது
மகிழ்ந்திருக்குமா?
ஒரு கல்லாவது தான் சிற்பமானதில்
பெருமைப்பட்டிருக்குமா?