மதில்சுவர் அப்புறம்
பள்ளித் தோழர்களான இரு குழந்தைகள்
விருந்தாளிகளாய்க் கூடினர் ஒரு வீட்டில்.
வீதியில் அதனைக் கொண்டாடும் விதமாய்ப்
பந்தையும் மட்டையையும் எடுத்து ஆடினர்
சந்தித்ததிலிருந்து அந்திவரை.
இல்லை; அந்தி வரவில்லை இன்னும்
ஆட்டம் முடிக்கும் அந்த நேரம் வரவில்லை
அந்த நேரம் வரக்கூடாது வரக்கூடாது
அந்த நேரம் வரக்கூடாது.
வராது வராது வரவே வராது
ஆனால் அந்தோ – விழுந்தது பந்து,
ஒரு பெரிய சாக்கடைத் தொட்டியில்!
நொடிந்தவராய் இருவரும் தந்தையிடம் ஓடினர்!
கருணையுள் நீந்தும் கண்மணிதானோ
சாக்கடைக் கருமையில் பந்தின் மிதப்பு?
மீணடது களிப்பு மீண்டது சொர்க்கம்
மீண்டது ஆட்டம்
ஆட்டம் ஆட்டம் ஆட்டம் –
பொங்கிய வேகத்தின் பந்து இப்போது
மதிற்சுவர் தாண்டி விழுந்தது அப்புறம்
இரும்புக் கேட்டின் இடுக்குவழியே – அமைதியாக –
இருந்தது இருந்தது – ஆனால் –
எடுத்துத் தரவேண்டியவர் வந்தார்,
இல்லை என்றார்.
அப்பந்தும் அவ்விடம் இல்லாமல் மறைந்தது
’பிதாவே இவர்களை மன்னியும்...’ என்று
இயேசு இறைஞ்சினார் அச்சிறார்களிடத்து