ஆயிரம் பேரும் ஆயிரம் நுனிபற்றி
ஆயிரம் பேரும் ஆயிரம் நுனிபற்றி
தத்தமது பக்கம் இழுக்க
கிழிந்து போகாது
அத்தனை பேரின் ஆசைகளையும் நிறைவேற்றும்
இச்சையே தன் வடிவமாகும் –
உன்னை நான் அறிந்தேன்
ஒப்பிலாப் பேரமைதி கொண்டேன்
அந்த ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளத் தவறுகிற
ஒரு போர்ப் பின்னல் நிகழ்ந்துகொண்டிருக்க
அதுவேயாகும் – உன் கட்டழகின் – வடிவைத்
துல்லியமாய் நான் அறிகிறேன்.
எத்துணைப் பேரழகி நீ! எத்துணைப் பேரன்பு நீ!
என் நோயினைக் களைந்த மாமருந்து நீ!
நானுனைக் கண்டபோது
நீயுமெனைக் கண்டுகொண்டாய்
பார்வை மாறாமல் நாம் ஒருவரையொருவர்
பருகிக்கொண்டிருக்கும் இவ்வேளை குலைய
என் காதலை நான் உன்னிடம்
பிரகடனம் செய்யவா எனக்
காமிக்கத் தொடங்கும்போது
என் காமத்தையும் கற்பனைகளையும் பொசுக்கிக்
கைக் குழந்தையென எனை அணைத்துக் கிடக்கும்
உன் கரத்தை உணர்கிறேன்
எனினும் நான் வளருவேன் என் அன்னையே
உன்னுடையதே போன்ற குணங்களனைத்தும் பெற்று
வளர்ந்து வந்துன்னைக் கரம் பிடிப்பேன்
இவ்வுலகிலுள்ளோர் எல்லோர் முன்னிலையிலும்
உன்னை நான் அவர்களுக்குக் காட்டுவேன்