மதிப்பிற்குரிய
மொழியியல் வல்லுநர் அவர்களுக்கு
வணக்கம்.
வாழ்க உங்கள் மொழி மைய வாதம்
உங்களுக்குத் தெரியும்:
நம் காடுகளில் அருகிவருகின்றன புலிகள்.
உங்களுக்குத் தெரியும்,
புலிகளைப் பார்த்திராத எம் மக்கள் சிலருக்கு
புலி என்ற சொல் ஒன்றே புகல் என்பது
இந்தப் பரிதாபநிலைமீது இரக்கம் கொள்வாரும்
நீங்கள் அல்ல என்பதை நான் அறிவேன்
உங்களுக்கு ஓர் யோசனை
உங்கள் விளக்கைக் கையிலெடுத்துக் கொள்ளுங்கள்
முடிவுறாத இந்த இரவின் வழியே
மொழிக் கிடங்கைச் சென்று அடையுங்கள்
ஏன் இப்படி உங்கள் இதயம்? உங்கள் கைகள்?
பயப்பட வேண்டாம். காவலர் எவரும் இல்லை
புலி என்ற சொல்லைத் தேடி எடுத்துவிட்டீர்களா?
சிறு தடயமும் இன்றி அதை அழித்துவிடுங்கள்
யாருக்கும் தெரியாது. அவ்வேளை
கானகத்தின் கண்காணாப் பகுதியிலிருக்கும்
அநதச் சில புலிகளும் துடித்து மடிவதைக் கேட்பீர்கள்
அல்லது அந்த அவலக் குரல்
உங்கள் செவிகளைத் தொடாமலும் போகலாம்
வந்துவிடுங்கள். நிம்மதியாய்த் தூங்கி எழுங்கள்
நல்ல தூக்கமில்லை என்கிறீர்கள்
திரும்பி வரும் வழியில்
உங்களைப்போலவே யார் யாரோ வந்துபோன
சுவடுகளையும் தடயங்களையும் நீங்கள் கண்டது
திரும்பத் திரும்ப உங்கள் மூளையில் புரள்வது
காரணமாயிருக்கலாம்
விடுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள், நடங்கள்.
உங்கள் வெற்றிநடையைத் தடுத்து நிறுத்தியபடி
அடிக்கடி உங்கள்முன் காட்சியளிக்கிறது
ஒரு மரம் – ஆக்டபஸ் – பயப்படுகிறீர்கள்.
மீண்டும் மரம் என்ற சொல்லழித்து அமர்கிறீர்கள்.
ஆனால் மரம் சாகவில்லை
நீங்கள் செல்லுமிடமெங்கும்
சொல்லற்று நிற்கிறது அது
நிலைமாறாத கால்களை ஊன்றி
நெஞ்சைக் காட்ட விரித்த கைகள்
வானில் நெளியும் விசித்திரத்தோடு