விழிப்பு
விடிகாலை
என்னால் விவரிக்க ஒண்ணாத
ஒரு மாமனிதனைப் போல்
என்னைத் தொட்டு எழுப்பக் கூடுமா
அல்ல
அது ஒரு மனிதனல்ல
ஒரு பரிசுப் பொருளாய்
என் முன் விரிந்திருந்த உலகம்
ஒரு மனிதனல்ல
இதயத்தில் பொங்கி
என் உடலெங்கும் சுறுசுறுப்பாய்ப்
பாயும் இந்த இரத்தத்தின் மொழியை
எப்படி மொழிபெயர்ப்பேன்
அன்பு என்பேனா
காமம் என்பேனா
வாழ்வின் துடிப்பு என்பேனா
மரணம் என்பேனா
என்ன வலி இது
என்ன ஆனந்தம் இது
அழகின் எதிரொலியா
என் தனிமையின் தவிப்பா
தன்மையின் மவுனமா
இரு பக்கங்களும் ஒன்றாகும்
எந்த ஒரு மதிற்சுவர்மேல் நிற்கிறேன்
எந்த ஊசி முனை இது?
அவ்வேளை
எதிர்ப்படும் உன்னைக்
கட்டிக் தழுவும் என் கரங்களுள்
கடமைகளின் அழுத்தம் மறந்து
ஒரு கணமேனும் உயிர்த்திருப்பாயா?