தாய்
எவ்வளவு இளமையில் கணவனை இழந்துவிட்டாய்
கைக்குழந்தையின் சிரிப்பில் காலத்தை மறந்தாய்
இன்னும் என்னென்ன நினைவுகளில்
எப்போதும் உன்னைப் புதைத்துக்கொண்டாய்
நினைவுத் துயர்களால் கன்றியிருந்த உன் முகத்தை
வெளிப்பாடுகள் இன்றிப் புதையுண்டிருந்த உன் மவுனத்தை
தாய் எனும் படிமம் இதமாய்ப் போர்த்தக்
குளிர் காய்ந்தனையோ
எவ்வளவு கொடை உள்ளம் வந்துவிட்டது உனக்கு
உன்னால் பராமரிக்கப்பட்டு
வளர்ந்து பெரியவர்களான உறவுக் குழந்தைகளும்
ஒவ்வொருவராய் உன்னிடமிருந்து விடைபெற்றுக்கொண்டனர்
உன் சொந்தமகன் அதுவும் உன் கணவனின் சாயலில்
வளர்ந்து நிற்கிறதில்தான் உனக்கு எவ்வளவு மகிழ்ச்சி
உன் சாதனையோ உன் பிரார்த்தனைகளின் பலிதமோ
நீ சொன்னவாறெல்லாம் அவன் கேட்கிறான்
உன்மீது அவன் உயிராய் இருக்கிறான்
இனி என்ன
வெற்றி உவகையுடன் உன் கடமையை யோசிக்கிறாய்
மருமகள் தேடி நீ அலைந்த சுயம்வரத்திலிருந்து
மணப்பந்தலில் உற்றார் உறவினரெல்லாம் சூழ்ந்த
உணவுப் பந்தியில் வரை...
எப்படி பொங்கி வழிந்தது
அதுநாள் வரை நீ கண்டறியாத குதூகலம்
இன்று உனக்கு என்ன வந்துவிட்டது
மகனுக்கும் மருமகளுக்குமிடையே புகுந்து
வெளியே சொல்லக் கூசும் செயல்களைக்
கூசாமல் செய்கிறாய்
உளவியல் அறிஞனாய் மலர்ந்த ஜெர்மன்
நரம்பியல் நிபுணன் ஒருவனின் கெக்கெலி
கேட்கவில்லையா உன் தனிமையின் முகடுகளில்?
உன்னை நீ வாசிப்பாயா?
அந்தப் புத்தகத்திலில்லாதது வேறெங்குமில்லை