Sunday, March 6, 2011

மரம் வெட்டப்பட்ட இடம்

கனவுகள் தோறும் புகுந்து
என்னைத் துரத்தியது
மரம் வெட்டப்பட்ட இடத்திலிருந்து
என் அறையைத் தாக்கிய வெய்யில்.

முடிவின்றிப் பொசுக்கும் பாலை ஒன்றில்
ஒரு பிடி நிலம் தேடி
முடிவின்றி நடந்து கொண்டிருந்தேன்
ஒரு கனவில்.

குளிரூட்டப்பட்ட சவப்பெட்டி ஒன்றுக்குள்
கைகால்கள் முடக்கி
நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தேன்
ஒரு கனவில்.

நீர் மாற்றப்படாத நீச்சல்குளம் ஒன்றில்
நாற்றமெடுத்த நீர், மேலும் நாறும்படி
பிணமாகக் கிடந்தேன் ஒரு கனவில்.

செவிட்டுக்களை படிந்த
முகங்களுடனும் உடல்களுடனும்
அருவியிலும் ஆற்றிலும்
குளித்துக் கொண்டிருந்தனர் மக்கள்

கழிவுநீர்த் தேக்கம் காத்திரம் உரைக்கும்
அழுக்குச் சேரிகளில்
கொந்தளித்துக் கொண்டிருந்தனர்
மலைவாழ் பழங்குடி மனிதர்கள்.

என் அறையைத் தாக்கிக் கொண்டிருந்தது
அதிகார வன்முறையும் ஆடம்பரங்களும்
அறியாத கவிதை
கண்ணீர் ததும்பும் ஒரு வேதனை
மரம் வெட்டப்படுவதைப் போல அழிந்து
மரம் வெட்டப்பட்ட இடம் போலக் கனன்றபடி.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP