தொடுதல்
ஒளியின் சிறகுகள் உதைத்து வெளிப்படுகையில்
தெறித்து அறுகிறது தொப்புள் கொடி
தேவதைகளின்கண்களின் மின்னுகின்றன
உடலெனப்படுவதன் கன்னிமையும்
உளமெனப்படுவதன் குழந்தைமையும்
உயிரெனப்படுவதன் ஆனந்தமும்
அனாதியிலிருந்து
ஓடிவரும் குருதி துறுதுறுக்கும்
விரல் தொட்டு
'அணைகிறது ஒளி '
எனப் பதறாதே
விரல் தொடுகையில்
கரியும் சிறகுகளின் வெப்பத்தில்
பெறுகின்றன
கன்னிமை தாய்மையை
குழந்தைமை அறிவை
ஆனந்தம் துக்கத்தை
பதறாதே பொறு விரலை எடுக்காதே
அந்த ஒளி உன் விரல் வழியாக புகுந்து
உன்னுள் இயற்றப்படும் வரை பொறு
அப்புறம் கைவந்துவிடும் அந்தக்கலை
பாதம் பதிக்காமல் உலவுதற்கும்
கைகள் விரியாமல் அணைப்பதற்கும்
விரல்களில்லாமல் தொடுவதற்கும்
இதழ்பதிக்காமல் முத்தமிடுவதற்கும்
சொற்களில்லாமல் பேசுவதற்கும்
இல்லாமலே இருப்பதற்குமான கலை .