கருநீலப் பூ
கரிய நதியொன்று
அகண்ட காவேரியாய்ப் பாய்ந்து
குரூரங்கள் செழித்த இப் பூமியில் -
பிழைக்கத் தெரிந்துகொண்ட மனிதர்களாலானதோ
இவ்வுலகம்?
பட்டினி போடப்பட்ட சிங்கத்துடன்
அடிமை ஒருவனை அடைத்துக் களிக்கும்
அரங்குக் கலாரசனையின்
அதே வண்ண மாறுபாடுகள்தாமோ
நம் வாழ்வும் கலையும்?
இந்நதிமூலம் தேடிப் போய்த்
தன் கண்ணாறக் கண்டு வந்ததைத்தான்
அவன் உரைத்தான்,
'சக மனிதனைவிட தான் ஒசத்தி
எனும் குறுகிய இடத்திலிருந்து உற்பத்தியாகியதே
அந்தக் கரிய நதி' என்று!
அப்பாவியாய்க் கண்ணோட்டிக் கிடக்கும் இந்நதியோரம்
நெஞ்சைப் பிழியும் வேதனையே
ஒரு கருநீலப் பூவாய்
தான் பூத்ததன்றி வேறொரு நோக்கமின்றிப்
பூத்து நிற்கிறது, அழகின் ஒரு செயல்பாடாக