கவி வாழ்வு
‘இருக்கும்போது வருவதே இல்லை’
என்ற ஞானத்தில்
இருந்ததையெல்லாம் வாரி இறைத்துவிட்டு
வெறுமே இருந்தேன்
இல்லாத இப்போதுதான் இக் காக்கைகள்
பிராண்டிப் பிடுங்குவதுபோல்
என்னைச் சூழ்ந்துகொண்டு கரைகின்றன
ஓ! இது ஒன்று எஞ்சி இருக்கிறதா என
அதையும் கையிலெடுத்துப்
பிய்த்துப் பிய்த்துப் போடத் தொடங்கினேன்
அக்ஷய பாத்ரப் பண்டம்போல்
குறையவே இல்லை இதயம்
அந்தக் கரைச்சலும் தீர்ந்தபாடில்லை