விதிகள்
மகளை ஒரு முழு உருவப் புகைப்படமாக மாற்றி
பைக்குள் வைத்துக் கொண்டு மாப்பிள்ளைதேடும் தந்தை
பழையபடி அப்புகைப்படத்தை
ஒரு பெண்ணாக மாற்றவல்ல மந்திரவாதி ஆவார்.
உற்றத்திலும் சுற்றத்திலும்
ஒரு இதயத்தைக்கூட சந்தித்தறியாத ரசிகன்
அவன் தன் கலைஞனைக் கண்டவுடன்
உயிர்பெருகி சாவான்
வண்ண விகாரங்களும் கர்ண கொடூரங்களூமான
வாழ்க்கையை
வெற்று திரைச்சீலையையும் ஒற்றை வண்ணமும் கொண்டு
எதிர்கொள்ளும் கலைஞன்
உதிரச்சாயம் உள்ளவரையே அவன் வாழ்க்கை
எளியவன் நான் நன்றாகவே அறிவேன்
வரிசையாக நிறுத்தி வைத்தான் நானே கடைசி மனிதன்
முதல்வனை கடவுளை அல்லது மகாத்மாவை
நான் நனறாகவே அறிவேன்
அவரை அடுத்துநிற்கும் பேற்றை நான் பெற்றுள்ளதால்!
எவ்வாறெனில்
பூமி ஒரு கோளம் அதில்
ஒவ்வொரு உண்மையும் ஒரு வட்டம்
இடத்தை அடைக்கும் பொருட்கள் மேலெல்லாம்
தூசியாய் படியும் பரம்பொருள் அது !
அதுமட்டுமென்ன
விதிகளுக்குள் அடங்காது
எல்லாவற்றுக்கும் விதிகளை இயற்றிக் கொண்டிருக்கிறது .