துயர மூச்சு
வெயில் தன் குடை மடக்கி
ஒளியாய் அமர்ந்திருக்கிறது
வீதிகள் அலுவலகங்களெங்கும்
தங்களைத் தாங்களே துன்புறுத்தும்
ஒலிகள் சுமந்து களைத்த மனிதர்களின்
துயர மூச்சு காற்றில் அலைகிறது
ஆலயமணியின் கார்வையில்
மின் அதிர்ச்சிக்கு ஆளாகிப்
புலம்பித் திரிகிறது
எங்கும் அழுகிய பதார்த்த மொன்றின் நெடி
மக்கிக் கொண்டிருக்கும்
கழிவுக் குவியல்களின் வாடை
கர்ப்பக் கிருகத்துள்
வாடித் தலை கவிழ்ந்த மலர்களின் மணம்
காவல் வீரர்களாய் எழுந்து
வீதிகளில் பாய்கிறது
இருளின் பாதாள நகரொன்றின்
நீதி மன்றத்தில் நிறுத்தப்படுகிறார்கள்
குற்றவாளிகள்
ஒவ்வொரு விடியல் செடிகளிலும்
கவலையற்ற மலர்கள் பூக்கின்றன