எங்கிருக்கிறீர்கள்?
காற்றிலும் ஒளியிலும் கூடியிருந்த
இறுக்கம் தளர்ந்துவிட்ட இதம்.
சிறிய வீட்டிலிருந்து
மூடாத கதவுகளும்
எண் அறைகளுமான
மிகப் பெரியதொரு வீட்டிற்கு
விரிந்திருந்தார்கள் அவர்கள்.
அவர்கள் குரல் மாந்தி
இனித்து எதிரொலிக்கவே
பிறவி எடுத்தனவாய் நிற்கின்றன
என் அறைச் சுவர்களும்.
சமையலறையிலிருந்து
“எங்கிருக்கிறீர்கள்
என் அன்பே”
என அவள் விளித்தாள்.
“எல்லா இடங்களிலும்”
என அறிவித்தது அவன் குரல்.
குரல் உதித்த இடம் நோக்கி
தன் கூர்அறிவைத்
தானே வியந்ததுவால்
சிவந்து ஒளிரும் முகத்துடன்
அவள் செல்கிறாள்
கையில் தன் இதயத்தை ஏந்தியபடி.