தொனி
இன்றாவது அந்த மனிதனைப் பற்றிச்
சிந்திக்கத் தொடங்கினோமே
அதற்காக நம்மைப் பாராட்டிக் கொள்வோம்
நலம் விசாரிக்கையில்
’இருக்கம்-யா’ என்றொலித்த
அவன் குரலை வாசிக்க மதியற்றுப் போயிருந்த நாம்
கவிதைகளின் ’தொனி’ குறித்து
விரிவாக ஆராய்ச்சிகள் செய்துகொண்டிருந்தோம்
நாற்காலியில் அமர்ந்தபடியோ
வாகனத்தை ஒரு நிமிடம் நிறுத்தி
ஒரு கால் ஊன்றி நின்றபடியோ
அல்லது அவனது குழந்தையின் குரலிலோ
நாளையைப் பற்றிய நம்பிக்கை
பேசப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம்
’பிழைத்துக் கிடந்தால் பார்க்கலாம்’ என்றான் அவன்
அய்யா... என்ற இறைஞ்சல் பாதாளத்திலிருந்து
தோழர் என்ற பாதாளக் கரண்டியைப் பற்றியபடி
ஹலோ என்றவாறு அவனைச் சமீபிக்கையில்
மலர்முகமும் நீட்டிய கையும்
அறஅதிர்ச்சிக்குள்ளாகிப் பொசுங்கும்படி
அசிங்கமான ஓர் உஷார் நிலைக்கு வந்த அந்த மேலாள்
குரூரமாக அவனைக் கைவிடுகையில்
அவன் என்ன ஆனான்?
அவன் உயிராசை வேகமன்றோ பக்கச் சுவரில்
உடல் சிராய்க்கத் தொற்றிக்கொண்டு தவிக்கிறது இன்று
ஜாதியம் நாறும் ஒரு மதத்தின் மூலமா
’எல்லோரும் அமரர் நிலை எய்தும் நன் முறையை’
இந்தியா உலகுக்களிக்கப் போகிறது?
எந்தத் தத்துவத்திலிருந்து பெற்றது,
இன்றைய அவனது வலிமையும்
இதய விரிவும் இந்தப் போராட்டமும் அறிவும்;
அச்சத்தால் பீடிக்கப்பட்டு அருவருப்பான
அந்த மேலாளுக்கும் சேர்த்தே
விடுதலை வேண்டி உழைக்கும் அவன் பேராளுமை?
கருணையற்ற மனித உலகிற்குக்
கருணையின் பாதையைக் காட்டும் பேரருள்?