கைவிடப்பட்ட...
உடைந்து சிதைந்து
கள்ளிகளும் களைகளும்
கஞ்சாவும் காமவக்கிரங்களும்
நடமாடுமிடமாகிவிட்டது
கைவிடப்பட்ட கடற்கரைப் பூங்கா;
தலைவிரித்தாடும் முட்செடிகளும்
பன்றிகளும் கழிப்பிடமுமாய்க்
கடற்கரை;
பிணமொன்று கிடந்தது ஒருநாள் அங்கே
’இவள்’தான் காரணமென்ற கடிதத்துடன்.
ஆசிரியர்களின் கொட்டாவி உலவும்
பேய் மண்டபமாகிவிட்டது
கடற்கரைச் சாலைப் பள்ளிக்கூடம்;
வீதி வீதியாய்க் குப்பை பொறுக்கிக்கொண்டு
நாறித் திரிகிறார்கள்
குழந்தைச் செல்வங்கள்;
ஊர் சுற்றும் வாகனங்களின்
ஓய்வு நிலையமாகிவிட்டது
விளையாட்டு மைதானம்;
குப்பை பொறுக்கித் திரியும்
குழந்தைகளின் பெற்றோர்களாகிவிட்டார்கள்
மனிதர்கள்
இயற்கை மடி விட்டு எழுந்துவிடாத
அணில்களும் பறவைகளும்
புழு பூச்சி விலங்குகளும்
புல் தாவரங்களும் கடல் நுரை அலைகளும்
பால்வாடிக் குழந்தைகளும்தான்
விசாரமின்றிக் குதூகலித்துத் திரிகிறார்கள்
இந்தக் கவிதைக்கு வெளியே
கவிதையோ கைவிடப்பட்ட
துக்கத்தின் குரலெனக் காந்துகிறது
கைவிடப்பட்ட மனிதன்தானோ கவிஞனும்?
இயற்கை மடியினின்று
இறங்கிவிட்ட குழந்தையோ?
கைவிட்டதும் யார் எது எனத்
தெரிந்துகொண்ட மேதையோ?